கிராம நத்தம், பட்டா மனை கண்ணை கட்டுதே.. கட்டுமான பொருள் விலை விண்ணை முட்டுதே! அரசுக்கு பெயிரா கடிதம்
சென்னை: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகும் நிலையும், கட்டுமானத் தொழில் முடங்கும் நிலையும், சாதாரண, சாமானிய மக்களின் சொந்த இல்லக் கனவுகள் நிறைவேறாத நிலையும் ஏற்பட்டுள்ளது.. எனவே, வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களின் நலன் கருதி, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனறு தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் உள்ளதாவது:

கண்ணை கட்டும் - விண்ணை முட்டும் - விலை
"திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை மனிதனை மெல்ல கொள்ளும் விஷத்தை போன்று, கண்ணை கட்டும் அளவிற்கும் - விண்ணை முட்டும் அளவிற்கும் செயற்கையான முறையில் உயர்ந்து வருகிறது. கட்டுமானத்துக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களான சிமெண்ட், கம்பி, ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வால் கட்டுமானத்துறை மிகவும் பாதிக்கப்பட்டு அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.இந்நிலையில் மேலும் சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், ஜல்லி, மரச்சாமான்கள், சானிட்டரிவேர், பெயிண்டிங் மெட்டீரியல், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் உட்பட அனைத்து கட்டுமானப் பொருட்களும் செயற்கையான முறையில் மெல்லக் கொள்ளும் விஷத்தை போன்று மிகக் கடுமையான வகையில் விலை உயர்ந்துள்ளது. இதனால் மேலும் கட்டுமானத்துறை நிலைகுலைந்திருக்கிறது.
கட்டுமான பொருட்கள் விலை
மேலும் இந்த விலை உயர்வுக்கு காரணம் கட்டுமான பொருட்களின் மீது திரும்பப் பெற இயலாத வகையில், ஆடம்பர பொருளுக்கு இணையாக மைய அரசு விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி சிமெண்ட் மற்றும், மனித கழிவுகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பாத்ரூம் பிட்டிங்ஸ், இருளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் உட்பட சில கட்டுமான பொருட்களுக்கு 28% சதவீதம் எனவும், இரும்பு கம்பி உட்பட சில கட்டுமான பொருட்களுக்கு 18% சதவீதம் எனவும் உள்ளது. (ஆடம்பரமான தங்கத்திற்கு மூன்று சதவிகிதம் தான் ஜிஎஸ்டி வரி என்பது குறிப்பிடத்தக்கது.)
மேலும் கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப் பொருட்கள், நிலக்கரி, எரிபொருள் (பெட்ரோல் மற்றும் டீசல்) மூலப் பொருட்களை உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, (ட்ரான்ஸ்போர்ட்) தேசிய சாலைகளை பயன்படுத்துவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், இதனால் ஏற்பட்டுள்ள தங்கு தடையும், மூலப் பொருட்களின் பற்றாக்குறையும் தான் காரணம் என கட்டுமான துறையின் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த மூத்த முன்னோடிகளும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
கிராம நத்தம் மனை, பட்டா மனைகள்
கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத செயற்கை விலை உயர்வுகளால் தனியார் கட்டுமான நிறுவனங்களும், கிராமப்புறங்களில் கிராம நத்தம் மனைகளிலும், பட்டா மனைகளிலும், நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களிலும் அரசின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வரும் சாதாரண, சாமானிய, பாமர மக்களும், மேலும் வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டி வரும் நடுத்தர வர்க்கத்தினரும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விலை உயர்வால் தமிழகத்தில் பல இடங்களில் வீடு கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், வீடு கட்டும் பொதுமக்களிடையே அவர்கள் ஏற்படுத்திக் கொண்டு ஒத்துக்கொண்ட விலைக்கு ஒப்பந்தப்படி குறித்த நேரத்தில் திட்டங்களை முடித்து ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சொந்த இல்லக்கனவுகள் தகர்கின்றன
மேலும் கட்டுமான பொருட்களின் இந்தக் கடுமையான (செயற்கையான முறையில் உயர்த்தப்பட்டுள்ள) விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகும் நிலையும், கட்டுமானத் தொழில் முடங்கும் நிலையும், சாதாரண, சாமானிய மக்களின் சொந்த இல்லக் கனவுகள் நிறைவேறாத நிலையும் ஏற்பட்டுள்ளது.ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர், மேற்கண்ட பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு சம்பந்தமான விவகாரங்களில் தாங்கள் தலையிட்டு, கட்டுமான பொருட்களின் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேச வேண்டும்.
கட்டுக்குள் விலையை கொண்டு வர வேண்டும்
ஏற்கனவே சிஎம்டிஏ, பதிவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட துறைகளின் செயல்களால் அதலபாதாளத்தில் இருக்கும் கட்டுமான தொழிலை மேலும் நசுக்கும் வகையில் விண்ணை முட்டும் அளவிற்கும் - கண்ணை கட்டும் அளவிற்கும் உயர்ந்து இருக்கும் கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர தாங்கள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுந்த தீர்வினை விரைவாக ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications