கூட்டுறவு துறை வரலாற்றில் இதுதான் முதல் முறை.. ஸ்டாலின் செய்த சூப்பர் விஷயம்.. நெகிழ்ந்த ஊழியர்கள்
சென்னை: கூட்டுறவு தணிக்கைத்துறை வரலாற்றில் முதன் முறையாக கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் நடந்துள்ளதற்காக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர் ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது.
கூட்டுறவுத்துறையில் கலந்தாய்வு என்பது முன்பு சிபாரிசு அடிப்படையில் மட்டுமே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. கூட்டுறவுத் துறையில் இருந்து தணிக்கைத் துறை பிரிக்கப்பட்டு 43 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் நடந்துள்ளதை கூட்டுறவு தணிக்கைத்துறையினர் வரவேற்றுள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையால் இது நடந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர் ஒன்றியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுத் தணிக்கைத் துறையின் வரலாற்றில் முதன்முறையாக 2 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது. பணியாளர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் ஓராண்டுக்கு மேல் 3 ஆண்டுகளுக்குள் பணியாற்றிய பணியாளர்கள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு இந்த கலந்தாய்வு நடந்துள்ளது.
1981-ம் ஆண்டில் கூட்டுறவுத் துறையில் இருந்து தணிக்கைத் துறை பிரிக்கப்பட்டு 43 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கலந்தாய்வு நடந்துள்ளது. கலந்தாய்வு தொடங்கிய முதல் நாளிலேயே சிபாரிசுகள் இல்லாமல் 450 பணியாளர்கள் இடமாற்றம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்காக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர் ஒன்றியம் நன்றி தெரிவிக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கூட்டுறவுத்துறை தணிக்கை துறையில் இப்படி ஒரு ஆச்சர்யமான மாற்றம் என்றால், கூட்டுறவுத்துறையில் மிகப்பெரிய அதிரடியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் படி மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் கூட்டுறவு சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 23,149 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.
அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டாக இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைத்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவியில் நீடித்து வந்தார்கள்.இந்தநிலையில் பெரும்பாலானவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிந்துவிட்டது.
இதையடுத்து கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டு தற்போது வரை மொத்தம் 1 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 152 பேர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக உள்ளார்களாம். இவர்களில் 63 லட்சத்து 22 ஆயிரத்து 288 பேர் தகுதியற்றவர்கள் மற்றும் முறைகேடாக சேர்க்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டதால் அவர்கள் பெயர்கள் நீக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த ஆதார் கார்டு, ரேஷன் அட்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஒருபுறம் எனில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications