போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா.. பணம் போடப்போறீங்களா..போலீஸ் வார்னிங்..என்னன்னு பாருங்க
சென்னை: அங்க கைவைச்சு,இங்க கைவச்சு கடைசியில் போஸ்ட் ஆபிஸ் மேலேயே கை வச்சிருக்கு ஒரு கும்பல்.. மக்கள் அதிகம் பயன்படுத்தும் அஞ்சல் துறை வங்கி பெயரில் போலியாக ஒரு வெப்சைட் உருவாக்கி அதன் மூலம் பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடப்பதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் பல கோடி மக்கள் தங்கள் பணத்தை போட்டுவைத்திருக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது அஞ்சல்துறை மட்டுமே. அஞ்சல் துறை வங்கியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்திய அஞ்சல்துறை 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' என்ற பெயரில் வங்கி சேவை நடத்தி வருகிறது.
இந்நிலையில் போஸ்ட் ஆபிஸ் வங்கியின் இணையதள பெயரில் மோசடியாக பண பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழக காவல்துறையின் 'சைபர் கிரைம்' பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய 'ஆன்லைன்' மோசடிகள் குறித்து எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது இணைய வழி மோசடி நபர்கள் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைத்து பண மோசடி செய்வதற்காக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்புகிறார்கள்.
அந்த குறுஞ்செய்தியில், உங்கள் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. எனவே குறுஞ்செய்தியில் உள்ள 'லிங்க்'கை கிளிக் செய்து, உங்கள் பான் கார்டு எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.
இதனை உண்மை என்று நம்பி அந்த லிங்க்கை பொதுமக்கள் திறந்து பார்த்தால், 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் இணையதளம் போலவே போலியான இணையதளம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு எண், வாடிக்கையாளர் அடையாள எண், செல்போன் எண், பிறந்த தேதி, பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யுமாறு கேட்பார்கள்.
அந்த தகவல்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓ.டி.பி.யை பதிவு செய்ய சொல்லும். அதில் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்தவுடன் வாடிக்கையாளரின் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளர் ஏமாற்றப்படுகிறார்கள்.
எனவே எந்த காரணம் கொண்டும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பிஷிங் இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களை கையாளுதல்கள் மூலமாக வருகிற 'லிங்க்'குகளை தொடர்பு கொள்ள வேண்டாம். ஓ.டி.பி.யையும் பகிர வேண்டாம்" இவ்வாறு 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications