நெல்லை, குமரி உட்பட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் 5 மாவட்டங்களில் நாளை (மார்ச் 4, செவ்வாய்க்கிழமை) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான அரசு அலுவலகங்களுக்கும் மார்ச் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கக்கூடிய எந்த வகையான ஒரு அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளோ செயல்படாது. அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினம், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில் அந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடு செய்திடும் வகையில் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications