வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு!
சென்னை: தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை, வருவாய், கடன் சுமை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் இன்று மாலை 5.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இருமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்ற உடனேயே தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை அறிக்கை வெளியீடு
தமிழக முதல்வராக விஜய் கடந்த மாதம் 10 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அன்றே தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாக விமர்சித்த விஜய், விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மரிய வில்சன் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளார். இதில் "தமிழ்நாட்டின் மொத்த உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி உள்ளது. தமிழகத்தின் மொத்த நிலுவைக் கடன் ரூ.10 லட்சம் கோடி. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இருமடங்கு கடன் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமை ஜிஎஸ்டிபியில் 28.3 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிக அதிகம்.
வருவாய் பற்றாக்குறை உயர்வு
கொரோனா காலக்கட்டத்தை விடவும் 2021 - 2026 இல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை இதுவரை இல்லாத வகையில் ரூ.78,324 கோடி ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 ஆக உள்ளது" என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், தமிழ்நாட்டின் மொத்த நிலுவைக் கடன் சுமார் ரூ.5 லட்சம் கோடியில் இருந்து ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2021-22ஆம் ஆண்டில் ரூ.46,528 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2025-26ஆம் ஆண்டில் ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இது மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவிலான உச்ச நிலை என தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தை விடவும் தற்போது வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
தனி நபர் கடன் அதிகரிப்பு
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 2.25 சதவீதத்திலிருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது தேசிய சராசரிக்கும் கீழான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது என்றும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் 28.3 சதவீதமாக இருப்பதாகவும், இது மிகவும் உயர்ந்த அளவாக கருதப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தனிநபர் கடன் சுமை தொடர்பாக அவர் கூறுகையில், 2020-21ஆம் ஆண்டில் ரூ.67,087 ஆக இருந்த தனிநபர் கடன், 2025-26ஆம் ஆண்டில் 92 சதவீதம் உயர்ந்து ரூ.1,28,934 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மற்ற மாநிலங்களை விட அதிக கடன் சுமையுடன் பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட..
கடந்த 60 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பெற்ற மொத்த கடன் ரூ.5 லட்சம் கோடி மட்டுமே இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் அதைவிட அதிக கடன் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். 60 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாநில அரசு ஆண்டுதோறும் வட்டி செலவாக மட்டும் ரூ.67,000 கோடி செலுத்தி வருவதாகவும், மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் 22.8 சதவீதம் வட்டி செலவிற்கே செல்கிறது என்றும் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் வட்டி செலவு 61 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
வட்டி செலவுகள் அதிகரிப்பதால் மாநிலத்தின் மூலதனச் செலவுகள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். தற்போது ஒவ்வொரு ரூ.1 புதிய மூலதனச் செலவிற்கும் ரூ.2.26 புதிய கடன் பெறப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடன் உயர்வு மூலதனச் செலவின வளர்ச்சியை விட இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் இந்த மாநிலங்களை விட குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
வரி வருவாய் தொடர்பாக பேசிய அமைச்சர், வணிக வரித்துறையில் நிலவும் அமைப்புசார் ஊழல் காரணமாக அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இணை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சொத்துப் பதிவு தொடர்பாக, முத்திரைத் தாள் கட்டணங்கள் சந்தை மதிப்பை விட குறைவாக நிர்ணயிக்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், சொத்துப் பதிவுகள் மூலம் இழக்கப்படும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த வருவாய் வரவுகளின் பங்கு 10 சதவீதத்திலிருந்து 8.32 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 0.48 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து விவரங்களும் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் வரவு - செலவு கணக்குகள், கடன்கள், முந்தைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஆகியவை இந்த வெள்ளை அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.
மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை, அரசு பேருந்துகளில் இலவச பயணம், விவசாய கடன்கள் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை விஜய் அறிவித்து இருந்தார். பொருளாதார சார்ந்த இந்த திட்டங்களை அரசின் நிதி நிலையை வைத்தே விரைவாக நிறைவேற்ற முடியும் என்பதால் தமிழக அரசு வெளியிட்டு உள்ள வெள்ளை அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications