சென்னை நகருக்குள்.. 3 இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்கலாம்.. ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு அனுமதி!
சென்னை: ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், சென்னை நகருக்குள் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்க தமிழக அரசு அனுமதியளிப்பதாக கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கதான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது.
இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் கொண்ட வரைபடத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மட்டுமல்லாது, சென்னைக்குள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால் கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே பேருந்து நிரம்பிவிடும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்ததற்கான நோக்கம் வீணாகிவிடும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இதற்கிடையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும் என்றும் பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications