உறவினர் வீட்டில் வாடும் மாணவி பிரியாவின் குடும்பம்.. புதிதாக வீடு வழங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை
சென்னை: சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கால்பந்து வீராங்கனை பிரியா நேற்று இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு ஒதுக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர் பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (வயது 17). ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரியா தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு திறமையாக விளையாடி வந்தார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார்.

மாணவியின் கால் அகற்றம்
இந்நிலையில் தான் சமீபத்தில் பிரியா மூட்டு வலியால் பாதிக்கப்பட்டார். சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவை டாக்டர்கள் பரிசோதித்தனர். வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வலி ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால் அகற்றப்பட்டது.

மருத்துவமனையில் உயிரிழப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று பிரியா உயிரிழந்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரியாவின் மரணத்தை சற்றும் எதிர்பாராத நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் பிரியாவின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறுதியாக நேற்று மாலை பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

டாக்டர்கள் சஸ்பெண்ட்
இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், ‛‛பிரியாவுக்கு அறுவை சிகிச்சை சரியாக செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு போடப்பட்ட கட்டு தான் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இறுக்கமாக போடப்பட்ட கட்டால் ரத்த ஒட்டம் தடைப்பட்டு உறுப்புகள் செயலிழந்து இறந்ததாக தெரிவித்தார். மேலும் அலட்சியமாக செயல்பட்ட 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வீடு வழங்க நடவடிக்கை
மேலும் பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். இந்நிலையில் தான் இறந்த கால்பந்து வீராங்கணை பிரியாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய்க்கு நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆறுதல் கூறினார். அப்போது உறவினர் வீட்டில் வசிப்பதாக பிரியாவின் தாய், அமைச்சர் சேகர்பாபுவிடம் கூறினார். இதனை கோரிக்கையாக ஏற்ற நிலையில் தமிழக அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்துக்கு புதிதாக வீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

விரைவில் ஒப்படைப்பு
அதன்படி தமிழ்நாட்டின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இதுதொடர்பாக மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பிரியாவின் வீட்டில் சில தகவல்களை சேகரித்துள்ளனர். விரைவில் வியாசர்பாடி பகுதியில் பிரியாவின் குடும்பத்துக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications