டிஜிட்டல் வடிவில் 30 லட்சம் ஓலைச்சுவடிகள் - தமிழ்நாடு அரசு இமாலய சாதனை
தமிழ்நாடு அரசு சார்பில் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியுள்ளது.
சென்னை: தமிழ்ப் பதிப்பு உலகின் தாத்தா உ.வே.சாமிநாதையர். இவரை 'தமிழ்த் தாத்தா' என்று அடைமொழி போட்டு முதன்முதலாக அழைத்தது எழுத்தாளர் கல்கிதான். கறையான்கள் பசிக்கு இரையாகிக் கொண்டிருந்த தமிழ்ச் சுவடிகளைத் தேடித்தேடி எடுத்து அச்சில் ஏற்றிய உ.வே.சா.வை தமிழ் உலகமே இன்றைக்கும் கொண்டாடுகிறது.
இவர் தனது வாழ்நாளில் ஏறக்குறைய 3 ஆயிரம் ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். அதில் 90க்கும் மேலானவற்றை அச்சில் வெளியிட்டு காலத்தால் அழியாது காப்பாற்றிக் கொடுத்தார்.
இவரது காலகட்டத்தில் இதே பணியில் சி.வை.தாமோதரம் பிள்ளையும் தன்னால் முடிந்த ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்துக் காப்பாற்றி இருக்கிறார். உ.வே.சா., தாமோதரம் பிள்ளை ஆகியோர்க்கு முன்னதாக, ஆங்கிலேயர் காலின் மெகன்சிதான் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடிச் சேகரித்த முன்னோடி அறிஞர்.

1868 ஆம் ஆண்டிலிருந்து சேகரித்த ஓலைச்சுவடிகள்:
அன்றைக்கு இவர்கள் ஓலைச்சுவடிகளுக்குள் புதைந்து கிடந்த இலக்கியச் செல்வங்களைத் தேடி எடுத்து அச்சுப் புத்தகமாக வெளியிட்டதால்தான் அவை காப்பாற்றப்பட்டன. ஆனால், இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. அச்சுப் புத்தகங்களாக மட்டுமே இருந்தால் அவற்றைக் காப்பாற்ற முடியாது. அவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.
ஏனெனில் இது டிஜிட்டல் யுகம். ஆகவே அரசு நமது கலைச் செல்வங்களை நாளைய தலைமுறையின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல அனைத்தையும் கணினி பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டியது மிகமிக அவசியம்.
அந்த அற்புதமான பணியைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது. சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியுள்ளது.
இது குறித்து அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் கண்காணிப்பாளர் ஆர். சந்திரமோகன் பேசுகையில், "தொல்லியல்துறை நூலகத்தில் லட்சக்கணக்கான கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தத் துறை சார்பில் 'தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள்' என்ற ஒரு புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானது. இந்தப் புத்தகத்தில் கோயில்கள் பற்றியும் அதன் நிர்வாகம் பற்றியும் பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மிகமிக முக்கியமான ஆவணம்.
ஆனால் பல காலமாகப் பதிப்பில் இல்லை. கவர்ன்மென்ட் ஓரியண்டல் மேனுஸ்கிரிப்ட் லைபிரரி 1957இல் வெளியிட்டுள்ளது. மறுபதிப்பு செய்யாமல் அப்படியே காலப்போக்கில் தங்கிவிட்டது. மொத்தம் 3 தொகுதிகள். டி.என்.சுப்ரமணியனின் கடின உழைப்பால் உருவான நூல்.

பழங்கால ஜோதிட முறையைப் பேசும் ‘சப்த ரிஷி நாடி’ :
இப்போது 'சப்த ரிஷி நாடி' என்ற ஒரு புத்தகம். பழங்கால ஜோதிடம், நாடி கணிப்பு பற்றிய தகவல்களை எல்லாம் உள்ளடக்கிய புத்தகம். ஜாதகத்திற்குத் தக்க பலன்கள், பரிகாரங்கள் பற்றிய செய்திகள் அடங்கிய பழமையான புத்தகம். மொத்தம் ஆறு தொகுதிகள் அடங்கிய நூல். அதை மீண்டும் இப்போது மறுபதிப்பு செய்ய இருக்கின்றோம். முன்பே 6 தொகுதிகள் வந்துள்ளன. அடுத்த 6 தொகுதிகள் தான் திரும்ப வரப் போகிறது.
இன்னும் சில மாதங்களில் அச்சில் வெளியாக உள்ளது. மேலும் அதை டிஜிட்டல் வடிவத்தில் வலைத்தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும்படி வெளியிடப் போகிறோம்.
நமது நூலகத்தில் மட்டும் 25 லட்சம் கையெழுத்து படிகள் உள்ளன. அதில் இதுவரை 22 லட்சம் வரை டிஜிட்டல் செய்துவிட்டோம். இன்னும் முடிக்க வேண்டியவை சில லட்ச பக்கங்கள்தான். அனைத்தையும் அப்படியே வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவேற்ற உள்ளோம். ஆராய்ச்சியாளர்கள் அதனை இலவசமாகவே தங்களின் ஆராய்ச்சிக்கோ, மறுவெளியீட்டுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லா ஆவணங்களையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப் போகிறோம்.
மொத்தமாக 16 மொழிகளுக்கு மேல் கையெழுத்து படிகள் உள்ளன. அதில், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம், சிங்களம் எனப் பல மொழிகளில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் ஓலைச்சுவடிகளைப் பார்த்துப் படியெடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள். இதற்காக மட்டும் இதுவரை 5 கோடி வரை நிதியைச் செலவழித்துள்ளது" என்கிறார்

தமிழ் ஓலைச்சுவடியைத் தேடிச் சேகரித்த வெள்ளையர்கள்:
இந்த நூலகத்தில் 1868 இல் இருந்து சேகரித்த ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதாவது உ.வே.சாமிநாதன் முன்னதாகவே காலின் மெகன்சி, டெயிலர், பிரௌன் போன்றோர்கள் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடிப் பாதுகாத்து வந்துள்ளனர். அவரது சேகரிப்பிலிருந்த ஓலைச்சுவடிகள் உட்பட இங்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிட்டுக் கூற வேண்டிய விஷயம். அவை அனைத்தும் தான் தற்போது பெரும் முயற்சியை எடுத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் (Government Oriental Manuscripts Library and Research Centre) 1869 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதால் வரலாற்று அறிஞர்களிடையே இது மாபெரும் பொக்கிஷமாகக் கருகப்படுகிறது. இது தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த டிஜிட்டல் பணிகள் தமிழ் ஆய்வு உலகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் சாதனை. இனி வரும் காலங்களில் ஆய்வாளர்களுக்கு இந்தத் தரவுகளை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் படிகளை, டிஜிட்டல் ஆக்கும் வேலை உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இடையே இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று பரவலால் ஊரடங்கு போடப்பட்டதால் வேலைகள் முழுக்க முடங்கின. இப்போது நிலைமை சீரானதைத் தொடர்ந்து மீண்டும் வேலைகள் வேகம் எடுத்துள்ளன.
இதே டிஜிட்டல் பணியை மற்றொரு திசையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செய்து வருகிறது. நிறுவனம் சார்பாக பணியை மேற்கொண்டு வருகிறார் சதிஷ்குமார். அவர் என்ன சொல்கிறார்? "அரசு பல பகுதிகளில் இந்த டிஜிட்டல் ஆகும் பணி நடைபெற்று வருகிறது. வெவ்வேறு துறை சார்ந்தும் இந்தப் பணி நடைபெறுகிறது.
உதாரணமாகத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒரு பக்கம் முடிந்தவரை நூல்களை டிஜிட்டல் வடிவத்தில் ஸ்கேன் செய்து அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றி வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கான நூல்கள் டிஜிட்டல் வடிவத்திற்கு மாறியுள்ளன.
இரண்டாவது தமிழ்நாடு பொது நூலகத்துறை சார்ந்து இந்த டிஜிட்டல் பணி நடைபெறுகிறது. மூன்றாவது தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் நிதி ஒதுக்கி, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இதே பணி நடந்து வருகிறது.
குறிப்பாக நாங்கள் கோவிலூர் மடத்தில் உள்ள 250 கட்டு ஓலைச்சுவடிகளை இதுவரை டிஜிட்டல் செய்துள்ளோம். இதில் அதிகமாக சமயம் சார்ந்த சுவடிகள் இருந்தன. பிறகு இலக்கியம், மருத்துவம் சார்ந்து சில நூல்களும் இருந்தன. அவற்றை முழுமையாக நாங்கள் கணினிமயமாக்கி உள்ளோம்.

அச்சில் வராத மணிவாசகர் வரலாற்றுச்சுவடி:
இந்த மடத்தில் அத்வைத வேதாந்தம் பாடமாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளது. அதற்கான பாடநூல்கள்தான் சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. வேதாந்த சூடாமணி, அஞ்ஞவதைப் பரணி போன்ற சுவடிகள் பாடமாக வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் இப்போது டிஜிட்டல் ஆகிவிட்டோம்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து பல சுவடிகள் தானமாக இந்த மடத்திற்குக் கொடுத்துள்ளனர். அதில் மணிவாசகர் வரலாறு என்று ஒரு சுவடி உள்ளது. இது இதுவரை அச்சில் வராத நூல். இது அரிதான சுவடி. மாணிக்கவாசகர் வரலாறு பற்றி முன்பே சில நூல்கள் வந்துள்ளனர். ஆனால் இது அதிலிருந்து வேறுபடுகிறது. வாதவூரார் புராணம் என்ற நூலில் உள்ள பாடல்கள் திருவாசகத்தில் இல்லை. பாடவேறுபாடுகள் உள்ளன.
இந்த மடம் போக திண்டிவனம் பக்கம் மேல்சித்தாமூரில் தான் தமிழ் சமணர்களின் தலைமை மடம் இருந்தது. அங்கே உள்ள மடத்திலுள்ள சுவடிகளை டிஜிட்டல் செய்துள்ளோம். அதில் தமிழ்ச் சுவடி மற்றும் கிரந்த சுவடிகளும் இருந்தன. இங்குள்ள சுவடிகள் மிக நீள நீளமான ஓலைகளில் எழுதப்பட்டுள்ளன. ஆய்வு பதிப்பு செய்வதற்கு மிக முக்கியமாக ஒப்புநோக்க வேண்டிய சுவடிகள் நிறைய இங்கே இருக்கின்றன.
உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த சீவகசிந்தாமணியை மூன்று பதிப்புகள் வரை அவர் பதிப்பித்தார். அந்தப் பதிப்புக்கும் இங்குள்ள மடத்தில் உள்ள சீவகசிந்தாமணிக்கும் பாடவேறுபாடுகள் உள்ளன.
ஆக, என்ன சொல்கிறோம் என்றால் பதிப்பு பணி என்பது இன்னும் முழுமை அடைந்துவிடவில்லை என்பதைத்தான். அதற்கு இந்த டிஜிட்டல் மயம் பெரிய உதவியைச் செய்யும்" என்கிறார்.
இவர் டிஜிட்டல் செய்துள்ள அனைத்து சுவடிகளும் 18 மற்றும் 19 நூற்றாண்டைச் சார்ந்தவை. சுமார் 250 ஆண்டுக்கால பழமையானவை. இப்படி இதுவரை ஒரு லட்சம் ஓலைச்சுவடிகளை இவரது குழு டிஜிட்டல் செய்துள்ளது.

60 ஆயிரத்திற்கும் மேலான ஓலைச்சுவடிகள் மீட்பு:
தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பாக டிஜிட்டல் பணியை ஈடுபட்டு வருபவரான எஸ்.செந்தில் பேசுகையில், "இதுவரை நாங்கள் 7.68லட்சம் பக்கங்கள் கொண்ட ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் ஆக்கியுள்ளோம். இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்து 60 ஆயிரத்திற்கும் மேலான ஓலைச்சுவடிகளை மீட்டு டிஜிட்டல் ஆக்கியுள்ளோம்" என்கிறார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications