பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசு ஊழியர்கள் தலையில் இடி! இனியும் பொறுக்க முடியாது.. தீவிரமாகும் போராட்டம்
சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு தற்போது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாததால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டமான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அமல்படுத்தியதன் மூலம், அதற்கு முன்னர் நிலவிய பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
அதன் பின்னர் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் புதிய திட்டத்தையே பின்பற்றி வருகின்றன. ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்காகச் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் பழைய திட்டத்தில், அரசு முழுமையாகவே ஓய்வூதியத்தைக் கணக்கிட்டு வழங்கியது. இதனால் அரசு ஊழியர்கள் புதிய திட்டம் அவர்களுக்கு பாதகமாக உள்ளது என்றும், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை பாதுகாப்பு குறைவாகும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம்" என்று உறுதி மொழி அளித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் கடுமையாக அதிருப்தி தெரிவித்துள்ளன.
ககன்தீப் சிங் பேடி
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு 2025 பிப்ரவரி மாதம் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு ஒன்பது மாதங்களில் முழுமையான பரிந்துரையைக் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த குழு தனது இடைக்கால அறிக்கையை (30.09.2025) அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த குழு இதுவரை 194 ஊழியர் சங்கங்களுடன் 9 சுற்று ஆலோசனைகள் நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் பிற நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளது. 7.36 இலட்சம் பணியாளர்களின் மற்றும் 6.75 இலட்சம் ஓய்வூதியதாரர்களின் தரவுகளையும் சேகரித்து மதிப்பீடு செய்துள்ளது.
இடைக்கால அறிக்கை தாமதம்
ஆனால் இன்னும் பல விவரங்கள் மற்றும் மத்திய அரசு, LIC உள்ளிட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கூறி குழு தனது இறுதி அறிக்கையை தாமதப்படுத்தியுள்ளது. இதனால் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க அமைப்புகள் கடுமையாக அதிருப்தி தெரிவித்துள்ளன. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் குழு அமைப்பதன் மூலம் காலம் தாழ்த்தி வருகிறது. அறிக்கை பெறுவோம் என கூறிய தேதியிலும் அதை செய்யாமல் இடைக்கால அறிக்கையோடு தப்பிக்கிறது. இது முழுமையாக கண்துடைப்பு நடவடிக்கை என்கின்றனர் அரசு ஊழியர்கள்.
காலவரையற்ற போராட்ட அறிவிப்பு
அவர்கள் மேலும், "உண்மையான ஆர்வம் இருந்தால் ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் OPS மீண்டும் அமல்படுத்தப்பட்டதைப் போல் தமிழ்நாடும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பது அரசு ஊழியர்களை தேர்தலுக்கு முன் ஏமாற்றும் முயற்சிதான் எனவும், இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர் சங்கங்கள் அக்டோபர் 6 முதல் 15 வரை ஊழியர் சந்திப்பு பிரசாரம், அக்டோபர் 15-ஆம் தேதி சென்னை மறியல், மேலும் அக்டோபர் 16 முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் என சிபிஎஸ் இயக்கம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications