ஊட்டி, கொடைக்கானலுக்கு வாகன கட்டுப்பாடு.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! சென்னை ஹைகோர்ட்டில் மனு
சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இ - பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசியத்திற்காக அங்கு அவசரமாக செல்லும் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தான் இ பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவால் குறிப்பிட்ட 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய வேலைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்வதற்கும் முடியாமல் உள்ளூர் வியாபாரிகள் தவித்ததாக கூறப்படுகிறது. மேலும் உள்ளூரில் வசித்து வரும் மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மேலும் தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications