13 கிராமங்கள் அழியும்.. பரந்தூரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் புரியாத புதிர்.. போராட்ட குழு விளக்கம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அரசு தயாராகி வருகிறது. அந்த நிலம் விவசாய நிலம் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால் அரசு இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் வந்து சென்ற பின்னர் விளக்கம் ஒன்றை அளித்தது. ஆனால் அரசு அளித்த அந்த விளக்கத்தில் தவறான புள்ளி விவரங்கள் இருப்பதாகவும், பரந்தூர் பகுதியில் 26.4 சதவீதம் நீர்நிலை இருப்பது மறைக்கப்பட்டுள்ளது என்றும் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னையின் மையப்பகுதியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்.இந்த பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்தை அறிவித்தது முதலே, கிராம மக்கள் போராடி வருகின்றனர். 912 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள். அரசு விமான நிலையம் அமைப்பதில் உறுதியாக உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆளும் திமுக அரசும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவும் சரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. பாஜகவுமே இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..

முக்கிய கட்சிகளில் பாமக மட்டுமே பரந்தூருக்கு பதில் திருப்போரூர் அருகே விமான நிலையம் அமைக்கலாம் என்று வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தவெக ஆகியவை எதிர்க்கின்றன. அண்மையில் நடிகர் விஜய் பரந்தூர் சென்று வந்தார். அடுத்த நாளே தமிழக அரசு பசுமை வெளி விமான நிலைய திட்டத்துக்கு பரந்தூர் பகுதியை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று ஒரு விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் பரந்தூர் மக்களை பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தவறான புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையதிட்ட எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மறுப்பு தெரிவித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறுகையில், "பண்ணூர் பகுதிக்கும், பரந்தூர் பகுதிக்குமான ஒப்பீட்டில் சில தவறான புள்ளி விவரங்கள் வேண்டுமென்றே இடம் பெற்றிருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. விமான நிலைய திட்டத்தின் அரசாணையில் பண்ணூர் பகுதியில் 1546 குடும்பங்கள் உள்ளதாக குறிப்பிட்டுவிட்டு தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள முன் சாத்திய கூறு ஆய்வு அறிக்கையில் வெறும் 250 குடும்பங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதில் எது உண்மை என்பது தெரியவில்லை. ஏன் இந்த முரண்பட்ட தகவல் என்பது யாருக்கும் புரியவில்லை. மேலும் பரந்தூர் பகுதியில் 26.4 சதவீதம் நீர் நிலை இருப்பதையும், பண்ணூர் பகுதியில் எந்தவித நீர்நிலையும் இல்லை என்ற புள்ளி விவரமும் மறைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களுக்கான நீர்நிலை பற்றிய ஒப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளது.

பரந்தூர் பகுதியில் 46 சதவீதம் நன்செய் நிலங்களும், அதாவது 2547 ஏக்கர் இருப்பதையும், புன்செய் 16.3 சதவீதம் அதாவது 877 ஏக்கர் ஆக மொத்த விவசாய நிலம் 3424 ஏக்கர் என்பதும் மறைக்கப்பட்டிருக்கிறது. 26.4 சதவீதம் நீர் மேலாண்மையான 1424 ஏக்கர் இருப்பதையும், அரசு புறம்போக்கு வெறும் 7.9 சதவீதம் அதாவது 427 ஏக்கர் மட்டும்தான் உள்ளது என்பதையும் மறைத்து அரசுக்கு ஆதரவான சமூக ஊடக பிரிவிலும் தவறான புள்ளி விவரங்களை பதிவிட்டு பரந்தூர் பகுதி போன்று விவசாய நிலங்களோ, நீர் நிலைகளோ இல்லாத பண்ணுர் பகுதியை உயர்த்தி பிடிக்கும் மர்மம் என்ன? என்பது தெரியவில்லை. வெறும் 2 கிராமங்கள் மட்டுமே அதாவது 250 குடும்பங்களே பாதிக்கப்படுவதாக அமையும் பண்ணூரை விட்டுவிட்டு 1005 குடும்பங்களும், 13 கிராமங்களும் அழியகூடிய பரந்தூரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்னவென்று புரியாத புதிராக உள்ளது.
எந்த வகையிலும் பொருத்தமில்லாத பல சவால்கள் நிறைந்த வேளாண்மை பகுதியான பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் தொல்லியல் துறையின் குறிப்பின்படி 2000-ம் வருட பழைய கற்கால புராதன பகுதியான பரந்தூர் பகுதியை விமான நிலைய திட்டத்தில் இருந்து விடுவித்து மாற்று இடத்தில் திட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசை பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் திட்ட எதிர்ப்பு போராட்ட குழு வேண்டி கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications