தமிழக அரசு வாழ்க.. முக ஸ்டாலின் வாழ்க.. பாரதி நினைவுநாளில் திடீரென்று வீடியோ வெளியிட்ட இளையராஜா
சென்னை: செப்டம்பர் 11 எனும் மகாகாவி பாரதியார் நினைவுநாளை ‛‛மகாகவி நாள்'' என அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்வர் முக ஸ்டாலினுக்கு ராஜ்யசபா எம்பியும், இசையமைப்பாளருமான இளையராஜா மனதாரா பாராட்டி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில்(தற்போது தூத்துக்குடி மாவட்டம்) பிறந்தவர் மகாகவி பாரதியார். இவர் 1882ம் ஆண்டு பிறந்தார். 11வது வயதில் இருந்தே கவிதை எழுத ஆரம்பித்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
1904 முதல் 1906 வரை "சுதேச மித்திரன்" பத்திரிகையில் பணியாற்றினார். கவிதைகள் மூலம் சுதந்திர உணர்வை தூண்டினார். நாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வை தூண்டினார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.

மகாகவி நாள் என அறிவிப்பு
இந்நிலையில் தான் மகாகவி பாரதியாரின் நினைவை போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அதில பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதியை "மகாகவி நாள்" ஆக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று தமிழகத்தில் ‛மகாகாவி நாள்' கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
|
இளையராஜா வீடியோ
இந்நிலையில் தான் இளையராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 3 நிமிடம் 11 வினாடி நீளம் கொண்டது. இந்த வீடியோவில் இளையராஜா தோன்றி பேசுகிறார். அப்போது அவர் கூறியதாவது: செப்டம்பர் 11 எல்லா வருடங்களிலும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். நினைவு வந்து என்னை வருத்தும்.

பாரதிக்கு பாடலில் ஆறுதல்
என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து அவர் சொன்ன ‛‛நிலச்சுமையென வாழ்ந்திடும் புரிகுவையோ?'' என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் அல்லவா. ‛‛நல்லதொரு வீனண செய்தேன் அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?'' என பாடினான் இல்லையா. தன்னை ஒரு நல்லவொரு வீணையாக உருவாக்கிய அம்மையே, சக்தியே, ‛‛அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ'' எனக்கூறிய நோதல் என்னை ரொம்ப வருத்தும். அதற்காகவே பாரதியாருக்கு ஆறுதல் சொல்ல என்னுடைய திரைப்பட பாடலில் அதற்கு பதில் சொல்லி இருக்கிறேன். ‛உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல'' என்ற பாடலில் ‛‛வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு'' என்று பாரதியாருக்கு நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.

வியக்கக்கூடியது
பாரதி கலங்குவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இந்த நாட்டிற்காக, நாட்டை பற்றி எப்படியெல்லாம் கற்பனை செய்துள்ளான் என்று பார்த்தால் அது வியக்ககூடியது. அது வியக்க வியக்க வியக்க வைக்கக்கூடியது.எந்தவொரு கற்பனையாளனுக்கு வராத கனவு இந்தியாவை பற்றி அவன் கண்டுகொண்டிருந்த கனவு. ‛‛சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்'' என பாடியுள்ளார்.

நதிகள் இணைப்பு திட்டம்
இன்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து மிகவும் ஆக்கப்பூர்வமாக பேசி எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என துடித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே அவன் சிறுவயதில் அந்த பாடலை பாடியபோது அவனுக்கு வயது என்ன இருந்திருக்கும்?. 25 வயது இருந்திருக்குமா?. ‛‛வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்வோம்''என்றார். நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே அவன் கற்பனை செய்து இருக்கிறான்.

முக ஸ்டாலின் வாழ்க
அவன் இன்று இருந்திருந்தால் என்பது காலத்தால் நடக்க முடியாத ஒன்று. ஆனால் அவனை நினைத்து மரியாதை, வணக்கம், அஞ்சலி செலுத்துவது மிகவும் மாபெரும் ஒப்பற்ற விஷயம். இது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். மகாகவி பாரதியாரோடு நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரது பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. எல்லையற்ற ஆனந்தத்தை தருகிறது. அதை எப்படி வார்த்தைகளில் சொல்வது என தெரியவில்லை. தமிழக அரசு வாழ்க. முதல்வர் முக ஸ்டாலின் வாழ்க. இந்த தினத்துக்கு மரியாதை கொடுத்து பாரதியாருக்கு மரியாதை கொடுத்து தமிழ் மக்களை, தமிழ் சமூகத்தை, தமிழ் இலக்கியவாதிகளை இதுவரை தோன்றிய அத்தனை பேரையும் மதிப்பது போன்ற ஒரு விஷயமாகும். அவரை நான் மிகவும் வாழ்த்துகிறேன். மனமார வாழ்த்துகிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications