பள்ளிக்கரணை டூ பரங்கிமலை.. மொத்தமாக வெளிவரப்போகும் பூதம்.. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு வைத்த ஆப்பு
சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ் தலைமையிலான விசாரணை குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அமைந்துள்ள சென்னையில் ஒரே சதுப்பு நிலம் என்றால் அது பள்ளிக்கரணை தான், தென் சென்னையின் முக்கியமான நீர் நிலை வடிகால் பகுதியாக திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மொத்த இந்தியாவிற்குமே பொக்கிசமான பகுதியாகும். உலகின் மிகப்பெரிய நன்னீர் சதுப்பு நில ஏரிகளில் பள்ளிக்கரணையும் ஒன்று.

1965-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அடையாறு மத்திய கைலாஷ் முதல் மேடவாக்கம் வரை பறந்து விரிந்து 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி இருந்தது. இப்போது வெறும் 500 ஹெக்டேர் என்கிற அளவில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிக்கரணை ஏரியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே தென் சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பள்ளிக்கரணை ஏரி கடல் மட்டத்தைவிட குறைவான அளவு அல்லது கடல் மட்டத்தின் அளவிலேயே அமைந்துள்ளது. இதன் காரணமாக எவ்வளவு தண்ணீர் வந்தாலும் சதுப்பு நிலம் உறிஞ்சும் அந்த நிலத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீர் வரும் போது மட்டுமே மேடாக உள்ள ஒக்கியம் மகடு வழியாக கடலில் கலக்கும். ஆனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குப்பைகள் மற்றும் கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில் கடந்த 20 முதல் 30 வருடங்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பும் அதன் நிலைக்கு காரணமாக உள்ளது. பள்ளிக்கரணை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்..
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அடங்கிய பல ஏக்கர் பரப்பிலான நிலங்கள் மோசடி பத்திரப்பதிவு மூலம் பல்வேறு தனி நபர்களது பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதில் பதிவுத்துறையில் பணியாற்றும் பல்வேறு அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனிநபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதனடிப்படையில் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் தொடர்பாக முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து உரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்தும், தல ஆய்வு மேற்கொண்டும் கண்டறிந்து, முறைகேடான பதிவுகள் இருப்பின் அதற்கு பொறுப்பாகியுள்ள பதிவுத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து உண்மை நிலையினைக் கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அரசுக் கடித எண். 6311429/எச் 1/2023-1, நாள் 20.02.2024.இன் படி சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., தலைமையிலான ஒரு விசாரணை குழுவானது அரசால் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அனுஷியா, சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. S.சரஸ்வதி, வட்டாட்சியர் duning fitreasu திரு.J.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications