தந்தை ஸ்டாலின்..தனயன் உதயநிதி! விளையாட்டில் வீறுநடை..இந்திய தலைநகராக தமிழகம்..அரசின் மெகா அறிக்கை
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சர்வதேச - தேசிய போட்டிகளை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தி இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் திகழ்கிறது தமிழ்நாடு என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன.

அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்லபல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியத் திருநாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிடும் நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
கலைஞர் கருணாநிதி: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் அவர்கள் ஆற்றலை திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும்பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, "நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே" எனும் சங்ககால பாடலை நினைவுகூரும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையை 28.3.2000 அன்று ஏற்படுத்தினார்கள்.
உதயநிதி ஸ்டாலின் : அந்த வகையில், இத்துறையின் பெயருக்கேற்ப, மிகவும் குறைந்த வயதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள், தொய்வில்லாத் தொடர் பணிகள் காரணமாக, விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார் என்றால் அது மிகையில்லை.

நவீன வசதிகள்: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இத்துறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகள்: ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப் பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள்: தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட வேண்டுமென்கின்ற தொலை நோக்குடன் திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் வெளியிட்டார்கள். பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் விளையாட்டு நகரம்: கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமனம்: தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்சித் தரத்தை உயர்த்திடும் வகையில், குறிப்பாக தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதை இலக்காகக் கொண்டு 81 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுவரையில் எந்த அரசும் வழங்கிடாத வகையில் உயரிய ஊக்கத் தொகையாக 87 கோடியே 61 இலட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.
44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய திட்டமிடல் காரணமாகவும், இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டியினை வரலாற்று புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் விளையாட்டு நாடுகள் எல்லாம் வியக்கும் வண்ணம் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழ்நாட்டரசின் விருந்தோம்பலைக் கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது. இதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்க் கொடி நாட்டியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு " Man of the Year" என்கின்ற விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டென்னிஸ் சங்கத்திற்கு வழங்கப்பட்ட 5 கோடி ரூபாய் நிதியுதவியுடன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.
ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி: 2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் தலா 1 கோடி ரூபாய்ச் செலவில், ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளாலும் இப்போட்டியினைச் சென்னையில் நடத்துவதற்குத் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்திற்கு வழங்கிய ரூபாய் 2 கோடி நிதியுதவியினாலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 சென்னையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2023: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சதுரங்க அறக்கட்டளையும் இணைந்து தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய 2 கோடி ரூபாய்ச் செலவில் 8 நாடுகள் பங்கேற்ற சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் - 2023 போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு சார்பில் வழங்கிய 17.33 கோடி ரூபாய் நிதியுதவியால், 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் - 2023 போட்டியானது ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அலை சறுக்குப் போட்டி-2023: உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலை சறுக்குப் போட்டி-2023 2 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புடன் நடத்தப்பட்டது.
கேலோ இந்தியா போட்டி 2023 : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 5,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மிகவும் சிறப்புடன் நடத்தப்பட்ட இப்போட்டியில் 30 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.
முதலமைச்சர் கோப்பை-2023: 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை-2023, 52 கோடி ரூபாய்ச் செலவில் கடந்த 2023ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 3 இலட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சென்னையில் 17 இடங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 27 ஆயிரத்து 554 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக சர்வதேச அலை சறுக்குப் போட்டி, அண்ணா மாராத்தான் போட்டி, ஹெசிஎல் சைக்கோளத்தான், அண்ணா மிதிவண்டிப் போட்டி உள்ளிட்ட போட்டிகளும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு: அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 13 வீரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்: விளையாட்டுத் துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத நிகழ்வாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அவர்களின் பயிற்சித் திறனை மேம்படுத்திடும் வகையிலும் 86 கோடி ரூபாய்ச் செலவில் முதற்கட்டமாக, 420 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 546 விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 10,793 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் 14,635 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்: விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு தனி முத்திரையைப் பதிக்கும் என்கின்ற உயரிய நோக்கில், இந்தியாவிலேயே முதன் முறையாக விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் வளர்ச்சிக்காக தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுச் சிறப்புடன் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகத்தில் 24 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பல்கலைக்கழத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான தங்கும் விடுதி, உணவுக்கூடம், ஆசிரியர் குடியிருப்பு, மொழி ஆய்வகம், கற்பித்தல் ஆய்வுக்கூடம், விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பு அறை ஆகிய வசதிகள் 30 கோடி ரூபாய்ச் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்: கடந்த மூன்றாண்டுகளில் உலக நாடுகளே வியக்கும் வண்ணம் பல்வேறு சர்வதேசப் போட்டிகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் பயனாக, விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்கப்பட்டு, அகில இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சார்பில் "விளையாட்டு வணிக விருது-2023" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேசக் கருத்தரங்கம்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேசக் கருத்தரங்கம் (TASCon 2023) சென்னை தாஜ்கோரமண்டலில் 2023 நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில், இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து விளையாட்டு அறிவியல் தொடர்பான அறிஞர்கள் தலைமையில் சுமார் 250 பிரநிதிகள் பங்கேற்றனர்.
மாநில இளைஞர் விழா : சென்னையில் நாட்டுநலப்பணித் திட்ட மாநில இளைஞர் விழா 2023 ஆம்ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாட்டில் முதன் முறையாக சென்னை கலைவாணர் அரங்கம் மற்றும் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. இதன் தொடக்க விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டுசிறப்பித்தார்கள்.
ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்: 2022 - 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 14 மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடி பனை விதைகள் நடப்பட்டன. இதில் 1,00,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக தமிழ்நாடு நாட்டுநலப்பணித்திட்டம் குளோபல் உலக சாதனை விருதினைப் பெற்றுள்ளது.
குடியரசு தின முகாம்: 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தைப் பெற்றது. மேலும் இந்நிகழ்வில் 6 பிரிவுகளில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குநரகம் "சிறந்த என்.சி.சி இயக்குநரகம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications