ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு! ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம்!
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வாடிவாசல்களில் காளைகளை அவிழ்ப்பதையும், அவற்றை வீரர்கள் அடக்குவதையும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் போட்டிகள் நடைபெறும். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி போன்ற தென்மாவட்டங்களில் காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளைத் தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை எங்கும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும்.
காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடா்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரபூா்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.
போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு தொடா்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
இது மட்டுமில்லாமல், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவக் குழு, மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, விழாக்குழுவினா், காளை உரிமையாளா்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருத்தல் அவசியம்.
தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவா்கள் வழங்க வேண்டும்.
போட்டி களத்துக்குள் பாா்வையாளா்களும், வெளி நபா்களும், வீரா்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் மஞ்சு விரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். அதனைப் பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications