கொடநாடு வழக்கில் கால தாமதம்.. சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுங்கள்.. கோவை செல்வராஜ் கோரிக்கை!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் ஏற்பட்டது. இதனால் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இடைக்கால பொதுச் செயலாளராக தற்போது எடப்பாடி பழனிசாமி உள்ளபோது, தேர்தலுக்கு என்ன அவசரம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கொடநாடு கொலை வழக்கு.. ”தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கனும்” மாஜி எம்எல்ஏ ஆறுக்குட்டி பரபரப்பு!

இபிஎஸ்-க்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சர்வாதிகாரி போல் செயல்படும் இபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி அணியினரால் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பட்டியல்கள் எதுவும் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.

கொடநாடு வழக்கில் கால தாமதம்
தொடர்ந்து கொடநாடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது குறித்து கூறிய அவர், கொடநாடு வழக்கு கால தாமதம் செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு சாதாரண வழக்கு அல்ல. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு இதுவரை தெளிவான முடிவு எதுவும் தெரியவில்லை.

திமுக மீது விமர்சனம்
தனியார் சொத்தான கொடநாடு வீட்டிற்கு பாதுகாப்பு போட முடியாது என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து திமுக ஆட்சிக்கு பின் கொடநாடு வழக்கு பற்றி விசாரிக்கப்பட்டது. இப்போது 6 ஆண்டுகளுக்கு பின் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் உண்மை நிலை தெரிய வருமா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் வந்தாலும் திமுக அரசு, கொடநாடு வழக்கு பற்றி முழுமையாக விசாரிக்காது.

சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்
மக்கள் மத்தியில் கொடநாடு வழக்கு பற்றி பரபரப்பாக பேசப்படும் சூழலில், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், கொடநாடு வழக்கில் உண்மை தெரிய வராது. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் கொடநாடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.