அரசு ஊழியர்கள் காட்டில் அடைமழை.. லட்ச லட்சமாய் கொட்டப் போகுது! முதல்வர் ஸ்டாலின் போட்ட கையெழுத்து
சென்னை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களுக்கு காப்பீடு, கல்விக் கடன், திருமண நிதி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் 7 வங்கிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தினார். அதில் அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கையெழுத்தாகியுள்ளது. மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றையும் வட்டிச் சலுகைகளுடன் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சியில் தன்னிகரற்று முன்னேறும் நிலையில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டினைக் கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தனிநபர் ஒருவர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றினைப் பொதுச்சந்தையில் பெற்றிடும் போது பெரும் தொகையினைச் செலவு செய்திட வேண்டியுள்ளது. இந்நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.
மேலும், இதுகுறித்து மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினையும், விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித்தொகையாக 10 இலட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 இலட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்கள்.
மேற்குறிப்பிட்ட இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டன." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications