Pongal: ஜன.8 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு! ரொக்கப் பணம் என்னாச்சு? ஸ்டாலின் நாளை அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கவுள்ளது. ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும். அது போல் மாட்டு பொங்கல் அன்று கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அரசு ஆண்டுதோறும் இந்தப் பண்டிகையை ஒட்டி பரிசுகளை வழங்கும். 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரையுடன் தலா ரூ. 1,000 ரொக்கப் பணமும் பரிசுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டன.

கடந்த 2025 பொங்கலின்போது நிதி நெருக்கடியால் அரசு ரொக்கப் பணம் தரவில்லை. எனினும், சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், இந்த ஆண்டு ரொக்கப்பணம் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கு ரூ 5,000 வழங்கக் கோரியிருந்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பிற்காக ரூ 248 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இவை அரிசி, கரும்பை கொள்முதல் செய்ய மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில் ரூ 1000 அளிக்க ரூ 2000 கோடி நிதி தேவை. ஆனால் வெறும் 248 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ரொக்க பணம் அறிவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.
ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின், பரிசுத் தொகுப்புடன் பணம் கிடைக்குமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கப்படும். இத்திட்டத்திற்கான டோக்கன்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. முதல்வரின் அறிவிப்பைப் பொறுத்து, ஜனவரி 4 அல்லது 5ஆம் தேதி முதல் இந்த டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்தான் தை 1. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரையை (வெல்லத்திற்கு பதில்) வாங்க முடியாத நிலையில் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அரசு பொங்கல் பண்டிகையின் போது இலவசமாக வழங்குகிறது.












Click it and Unblock the Notifications