சீட்டுகளை கலைத்துப் போட்ட முதல்வர்! தமிழகத்தில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! 9 கலெக்டர்களும் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை, திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டு திரும்பிய பிறகு தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு காவல் மற்றும் ஆட்சிப் பணியில் இருக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்கதை ஆகி வருகிறது. நவம்பர் 11ஆம் தேதி 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நெல்லை, திருவாரூர் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.’
ஈரோடு மாவட்ட திட்ட அலுவலரான சதீஷ் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய இயக்குனர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறப்பு திட்ட செயலாக்க துறை துணை செயலாளர் பிரதாப் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பட்டு வளர்ச்சி துறை இயக்குனராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வணிகவரித்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, தொழில்நுட்ப கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எல்காட் மேலாண்மை இயக்குனர் கண்ணன் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயு பப்ளிக் டிபார்ட்மென்ட் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச் சந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சிவசவுந்திரவல்லி, திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications