புதிதாக மாநகராட்சிகளுடன் இணையும் கிராமங்களுக்கு சில சலுகைகள்.. தமிழக அரசு புதிய திட்டம்?
சென்னை: தமிழ்நாட்டில் நகரங்களை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகள் நகரங்களை போல் வளர்ந்துவிட்டதால், அரசு அதனை நகராட்சியுடன் இணைக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் கிராம மக்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக புதிதாக மாநகராட்சிகளுடன் இணைந்தாலும் 100 நாள் வேலை திட்டத்தை தொடருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் அந்த பகுதிகளுக்கு வரி உயர்வும் இப்போதைக்கு இருக்காது என்கிறார்கள்.
தமிழ்நாடு மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்கள் எல்லாம் விவசாயத்திற்கு பதில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் தொழில் நிறுவனங்களும் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. பல்வேறு நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் தான் தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. நகரங்களில் ஆரம்பிப்பதைவிட கிராமங்களில் வரி குறைவு என்பதால் பல நிறுவனங்கள் நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களையே தேர்வு செய்கின்றன.

இதனால் தற்போதைய நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புறநங்களில் நகர்ப்புறங்களுக்கு இணையாக வேலைவாய்ப்பு, மக்கள் நெருக்கம் என வேகமாக வளர்ந்தாலும், அங்குள்ள சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது.
ஆனால் சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நிதி கிடைப்பது இல்லை. எனவே தமிழக அரசு அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இந்த ஊரக பகுதிகளை அவ்வப்போது இணைத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு (ஆகஸ்டு) மாதம் 10-ந் தேதி திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன . மேலும் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சியாக மாறின.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதியுடன் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை.. குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத் தன்மை வாய்ந்த ஊராட்சிகளை, அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, சென்னை மற்றும் மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கப்பட உள்ளது. மேலும் திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் அருகில் உள்ள 147 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி இணைக்கப்பட உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக அருகில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. மேலும் , ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக அருகில் உள்ள ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட உள்ளது.
அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும் இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் கோவை அருகில் உள்ள கிராமங்கள், திருச்சி அருகில் உள்ள கிராமங்கள், தூத்துக்குடி அருகில் உள்ள கிராமங்களை இணைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராம மக்கள் தங்கள் ஊரை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாரகள். இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் போராடி வருகிறார்கள். சிலர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளார்கள்.
இதையடுத்து தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஆய்வு செய்து வருகிறது. இதன்படி போராட்டங்கள் இயல்பாக நடக்கிறதா அல்லது யாரேனும் அரசியல் தலைவர்கள் தூண்டிவிடுகிறார்களா என்று ஆய்வு நடக்கிறது . இயல்பாக 100 நாள் வேலை திட்டம், வரி உயர்வு பிரச்சனை போன்ற காரணங்களுக்காக போராட்டம் நடத்தும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு ஆர்வம் காட்டுகிறதாம். இதன்படி இன்னும் சில ஆண்டுகளுக்கு 100 நாள் வேலை திட்டம் மூலம் வேலை அளிப்பது மற்றும் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரும் வரை வரித்தொகை உயர்த்தாமல் இருப்பது போன்றவை குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறதாம்.
அதேநேரம் குறிப்பிட்ட கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவி வகித்தவர்கள், மாநகராட்சி-நகராட்சியுடன் இணைந்துவிட்டால் இங்கு பஞ்சாயத்து தலைவர் பதவி இருக்காது, கவுன்சிலர் பதவி தான் இருக்கும் என்ற எண்ணத்தில் போராட்டத்தை தூண்டிவிடுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறதாம். விரைவில் அரசு இந்த போராட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications