சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசை விமர்சித்த எழுத்தாளருக்கும் 1.5 கோடி வீடு - பெருந்தன்மை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: 'எழுத்தாளனை யார் சார் மதிக்கிறார்கள்?' என்ற குரல் காலங்காலமாகத் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த சோகக் குரலைப் பெருமிதமாக மாற்றிக் காட்டியிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் சாகித்ய அகாதெமி விருது, ஞானபீட விருது, செம்மொழி விருது, கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகியவற்றைப் பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் அரசு சார்பில் இலவசமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதற்காக 'கனவு வீடு' என்ற தனித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பு வெளியானபோது பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ' அரசு சார்பில் வீடு என்றால் அதனை நடைமுறைப்படுத்த பல காலம் ஆகும்' என்றே பலரும் சமூக வலைதளங்களில் எதிர்மறைக் கருத்தைப் பதிவிட்டனர்.

எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை.. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்.. சீர்காழியில் மு.க.ஸ்டாலின்! எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை.. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்.. சீர்காழியில் மு.க.ஸ்டாலின்!

இது நடுநிலையான அரசு

இது நடுநிலையான அரசு

இதுவே வேறு மாநிலத்தில் இப்படியொரு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தால், 'அந்த மாநிலத்தைப் பாருங்கள், எழுத்தாளர்களுக்கு என்ன மரியாதை தருகிறார்கள்?' என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருப்பார்கள்.

அந்தப் பாராட்டுகளை எல்லாம் ஆரம்பத்தில் யாரும் முதலில் தெரிவிக்கவே இல்லை. ஆனால், 'சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம். அதுவே திராவிட மாடல் ஆட்சி' எனப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதைப் போலவே அதிரடியாக 'கனவு இல்லம்' அறிவிப்பை வெளியிட்டார்.

'முதலில் நடக்கட்டும், பின்னர் பார்க்கலாம்' என்று அமைதிகாத்த அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். முதற்கட்டமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் எழுத்தாளர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முறைப்படி வீடுகளை ஒதுக்குவதற்கான ஆவணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்படைத்தார்.

அப்போது கவிஞர் புவியரசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழறிஞர் இ.சுந்தரமூர்த்தி, கரிசல் எழுத்தாளர் பூமணி, எழுத்தாளர் இமையம், கு.மோகனராசு ஆகிய ஆறு பேர் முறையாக அரசாணையை ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக இப்போது இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் திலகவதி, பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார், இரா.கலைக்கோவன், எஸ்.ராமகிருஷ்ணன், கா.ராஜன், ஜோ.டி,குரூஸ், வண்ணதாசன் ஆகிய பத்து எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவதற்கான அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒன்றரை ஆண்டில் 16 எழுத்தாளர்களுக்கு வீடு

ஒன்றரை ஆண்டில் 16 எழுத்தாளர்களுக்கு வீடு

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வந்து ஒன்றரை வருடங்களில் ஏறக்குறைய 16 எழுத்தாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகால இடைவெளியில் இத்தனை பேர் பயன்பெறுவது மாபெரும் சாதனை. இந்த சிறப்பான திட்டம் குறித்து அதன்மூலம் பயனடைந்த எழுத்தாளர்கள் இருவரிடம் பேசினோம்.

முதலில், ''எழுத்தாளர் இமையம் என்ன சொல்கிறார்? இந்தத் திட்டம் குறித்து அவரது கருத்து என்ன?'' கேட்டோம். அவர், " இந்தியாவிலேயே இது ஒரு முன்மாதிரியான திட்டம். வேறு எந்த மாநிலங்களும் செய்யாத ஒன்று. அதை ஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின் செய்திருக்கிறார்.

பொதுவாக, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மொழி தொடர்பான செயல்பாடுகளில் கூடுதலாக கவனம் செலுத்துவது வழக்கம். அதற்குச் சான்றாகத்தான் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த செம்மொழி நிறுவன தமிழாய்வு விருதுகளை எல்லாம் உடனே வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, 'கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்து கட்சி, மதம், சாதி சார்பற்று அனைத்து தரப்பு எழுத்தாளர்களுக்கும் வீடு வழங்கி இருக்கிறார். இதன்மூலம் இந்த அரசு நடுநிலையாக இருக்கிறது என்பது தெரிகிறது. உண்மையில், ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை எந்தவித செலவு இல்லாமல் இலவசமாகக் கொடுப்பது என்பது ஓர் உலக அதிசயம். இவை எல்லாம் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காதவை'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய இமையம், ''தமிழுக்குச் சேவை செய்பவன் எழுத்தாளன். மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் எழுத்தாளனைப் பாதுகாக்க வேண்டும். 'திராவிட மாடல்' ஆட்சி என்பதே மொழியை அடிப்படையாகக் கொண்டதுதான். மொழிக்குச் செழுமை செய்ய நினைத்து எழுத்தாளர்களுக்குச் சிறப்பு சேர்க்கிறது இந்த அரசு. அதில்கூட அனைத்து தரப்பு கருத்தியலைப் பின்புலமாகக் கொண்டுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் மதிப்பளிக்கிறார் ஸ்டாலின்.

'அரசைப் புகழ்ந்தால் பரிசு' என்பதை மாற்றிய ஸ்டாலின்

'அரசைப் புகழ்ந்தால் பரிசு' என்பதை மாற்றிய ஸ்டாலின்

சங்ககாலம் தொட்டே எழுத்தாளன் என்றால் அரசனைப் புகழ்ந்து பாட வேண்டும். அப்படிப் பாடினால் சலுகைகள் கிடைக்கும். இதுதான் வரலாறு. அந்த அவப்பெயரை இந்த அரசு போக்கியுள்ளது. 'நீ அரசாங்கத்துக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். அரசு விருதைப் பெற்றிருந்தால் போதும். வீடு தானாகக் கிடைக்கும்' என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார் ஸ்டாலின்.

இதில் சிறப்பு என்னவென்றால் ஸ்டாலின் அரசை விமர்சிப்பவர்களுக்குக்கூட வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் 'சாகித்ய அகாதெமி' விருது பெற்ற அனைவருக்குமே வீடு கிடைத்துவிடும். ஒரு விடுபடல்கூட இருக்காது. அது உறுதி. இது ஒரு அபூர்வமான செயல்" என்கிறார் இமையம்.

இவரைப் போலவே இந்தத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு பயனாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார், எழுத்தாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி. அவரிடம் பேசினோம்.

''பொதுவாக எழுத்தாளர்களுக்கு வெளியில் சில மதிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களின் வீடுகளில் அந்த மதிப்பு, மரியாதை கிடைக்கிறதா எனக் கேட்டால், நிச்சயமாக இல்லை என்பதே பதில். 'எழுதி எழுதி என்னத்த கண்டீங்க. பிழைக்கிற வழியைப் பாருங்க' என்ற ஏளனப் பேச்சுதான் பெரும்பாலான எழுத்தாளர்களின் வீடுகளில் கிடைக்கிறது. அந்த மோசமான பார்வையை மாற்றி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

இன்று தமிழை மட்டுமே நம்பி, தன் வாழ்க்கையை அர்ப்பணித்த எழுத்தாளனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது என்றால் அது சும்மா இல்லை. அதுவும் அரசு சார்பில் செலவில்லாமல் கவுரவம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்தச் சிறப்பான திட்டத்தை நான் வரவேற்கிறேன்'' என்கிறார்.

எழுத்தில் வளர்ந்த திராவிட இயக்கம்

எழுத்தில் வளர்ந்த திராவிட இயக்கம்

''மூத்த எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் பற்றிய ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் ஒருமுறை பேருந்தில் ஓட்டுநர் அருகே நின்றபடி பயணம் செய்துள்ளார். அதே பேருந்தில் அவரது மாமா இன்னொரு கோடியில் நின்று கொண்டு பயணித்துள்ளார்.

அப்போது தற்செயலாக மாமா, வெங்கட்ராமனைப் பார்த்தாராம். கடைக்கோடியில் நின்ற அவர் அங்குள்ள சக பயணிகள் 70 பேர் காதில்படுகின்ற மாதிரி 'என்ன பண்ற மாப்பிள்ளை?' என்றாராம். அதற்கு அவர், 'எழுதுறேன் மாமா' என்று பதில் சொல்ல, 'அது சரி சோத்துக்கு என்ன பண்ற?' என்று ஏளனமாகக் கேட்டாராம்.

அதேபோலத்தான் புதுமைப்பித்தன். அவர் சாகின்றபோது தொ.மு,சி.ரகுநாதனிடம், 'எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கையில் ஏமாந்துவிடாதே' எனக் கூறியதாக எழுதி இருக்கிறார்'' எனக் குறிப்பிடும் திலகவதி.

'' தமிழ் எழுத்தாளனுக்கு சமூகத்திலிருந்த மதிப்பீடுகள் இவை. ஆனால் இன்று ஒரு எழுத்தாளனுக்கு பல லட்சம் மதிப்பிலான வீட்டை அரசு கொடுக்கிறது. அதுவும் அவர்கள் விரும்புகின்ற இடங்களிலேயே வீடு ஒதுக்கப்படுகிறது. சென்னை மாதிரியான ஊரில் ஓர் ஏழை எழுத்தாளன் இன்று வீடு வாங்க முடியுமா? அதை செய்து கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

திராவிட இயக்கமே எழுத்தில் பிறந்ததுதான். தங்களின் கருத்தை எழுத்து மூலம், நாடகம் மூலம், சினிமா மூலம் அவர்கள் பரப்பினார்கள். திராவிட இயக்கம் வந்த பிறகுதான் சினிமாவில் சமூக சீர்திருத்த வசனங்கள் வந்தன. அந்தளவுக்குப் புரட்சியை ஏற்படுத்தியவை திராவிடச் சிந்தனை எழுத்துகள்.

அந்த அந்த வரிசையில், ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்புக்கு வந்த உடன் எழுத்தாளர்களுக்கு இப்படியொரு உதவியைச் செய்துள்ளார். இதைவிட ஒரு எழுத்தாளனை எப்படிக் கவுரவிக்க முடியும்? முதலமைச்சர் ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்" என்கிறார்.

English summary
Tamil Nadu governments Respect for writers: Home gifted by CM Stalin under Kanavu illam scheme,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X