தமிழக கவர்னர் வழக்கில் பெரிய பின்னடைவு.. டெல்லி பாணியில் ஆளுநர்களுக்காக மத்திய அரசு சட்டம் இயற்றுமா?
சென்னை: சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களின் மீது அரசியல் சாசனம் வழங்காத அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம், இன்றைய வழக்கில் மிக முக்கிய தீர்ப்பளித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக டெல்லி ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, புதிய சட்டம் இயற்றி மத்திய அரசு பாதுகாத்தது. அதேபோல் இப்போது செய்யுமா? அடுத்து என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் தலைநகரான டெல்லி யூனியன் பிரதேசம் ஆகும். தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்தது. டெல்லியை பொறுத்தமட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம், கண்காணிப்பு அதிகாரம் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள துணை நிலை ஆளுநரிடம் இருந்து வந்தது.

டெல்லியில் அவசர சட்டம்
இதனை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் குடிமை பணி அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரம் என்பது டெல்லி அரசுக்கு தான் உள்ளது. இதில் ஆளுநர் மூலம் மத்திய அரசு தலையிட முடியாது என கடந்த 2023ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் காரணமாக டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமன அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு கிடைத்தது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் அப்போது உடனடியாக கொண்டு வந்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை ஆளுநர் மூலம் பறித்ததாக குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி அப்போது முன் வைத்தது.
மத்திய அரசுக்கு அதிகாரம்
இந்நிலையில் டெல்லியில் நடந்தது போலவே தமிழக ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்குமா? அப்படியே மத்திய அரசு முடிவெடுக்க முடியுமா? ஆளுநர்களுக்கு போதிய அதிகாரங்களை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் சட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆளுநர்கள் விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு வழக்கு
தீர்ப்பு விவரம் என்ன: தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முக்கியமான தீர்ப்பளித்தது.
ஆளுநர் அதிகாரங்கள்
தீர்ப்பின் படி, அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியவை தான்.
மறுபரிசீலனை
அதேநேரம் அரசியல் அமைப்பின் பிரிவு 200-ன்படி, முதல் முறையாக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநர் விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டசபைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். சட்டசபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்கியதாக வேண்டும்.
வீட்டோ அதிகாரம் இல்லை
அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இல்லை.. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும் போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக இருக்கிறது.
சட்டவிரோதமானது
எனவே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று இந்த உச்சநீதிமன்றம் கருதுகிறது. ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம் ஆகும்.
காலக்கெடு நிர்ணயம்
ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கிறது பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள் . ஆளுநர்களால் மறு பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு ஆகும். ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு பின்னடைவு
ஆளுநர்களின் அதிகாரம் என்ன என்பதும், ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு என்பது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதல்வராவார்.

ஆளுநர்களுக்காக சட்டம்?
மாநில அரசுகள் தங்கள் வரம்பிற்கு உட்பட்ட சட்டங்களை எந்த தடையும் இன்றி இனி நிறைவேற்ற முடியும். ஆளுநர் மத்திய அரசின் விருப்பப்படி இனி செயல்படவே முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மாநில அரசின் ஆலோசனைப்படியே செயல்பட்டாக வேண்டும். எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யுமா அல்லது டெல்லி பாணியில் அவசர சட்டம் இயற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications