பரபரப்பான அரசியல் சூழலில்.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி "விசிட்"
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான பனிப்போர் அதிகரித்துள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமால் நிலுவையில் வைத்து இருப்பதாக மோதலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து நேரடியாகவே பல தருணங்களில் விமர்சித்து வருகிறது.

ஒரு மசோதா நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே பொருள் ஆளுநர் கூறியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணம் மெற்கொண்டதையும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருந்தார்.
தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவிய நிலையில், இதற்கு உச்ச கட்டமாக செந்தில் பாலாஜி விவகாரம் அமைந்தது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் வசம் இருந்த துறைகளை அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுக்கு மாற்றப்படுவதாகவும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பி இருந்தார்.
இதில் இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதை ஏற்க முடியாது என்று கூறினார். எனினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார்.
இது தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் கவனம் பெற்றது. ஆளுநருக்கு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் இல்லை என்றும் சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். எனினும், அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆளுநர் தரப்பில் இருந்து மற்றொரு அறிவிப்பு வெளியானது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக ஏற்கனவே நான் கடிதம் அனுப்பியுள்ளேன்.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர், இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பதுதான் விவேகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அட்டர்னி ஜெனரலின் கருத்தை நான் பெறவிருக்கிறேன். இதற்கிடையே, அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, என்னிடம் இருந்து அடுத்த கடிதத் தொடர்பு வரும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் முன், நீங்கள் எந்த சட்ட ஆலோசனையையும் பெறவில்லை என்பதும் மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு உங்களிடம் சட்ட ஆலோசனை பெறும்படி கூறியதில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தை குறைவாக மதிப்பிட்டு நீங்கள் அவசரப்பட்டு செயல்பட்டிருப்பது தெளிவாகிறது" என்று சாடியிருந்தார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ள இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி செல்கிறார். வரும் 13 ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் டெல்லியில் ஆளுநர் முகாமிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications