அம்மாடியோவ் 255ஆ? பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள்! சாட்டையை சுழற்ற தயாராகும் கல்வித் துறை?
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கும் நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய 255 ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதால் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வித் துறைக்கு இந்த சம்பவங்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், பாலியல் வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியாக மட்டும் அல்லாது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கையோடு அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வதற்காக 2012 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டாய ஓய்வு பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளும் அரசு பள்ளிகள் என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் சான்றிதழ்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பாலியல் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டாலும் அரசாணைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்போது விவகாரம் பெரிதானதை அடுத்து பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்கள் மீது அரசாணைப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி பட்டியலை தயார் செய்த அதிகாரிகள் அரசிடம் வழங்கியுள்ளனர் .முதற்கட்ட விசாரணை அடிப்படையில் என்பது தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் 80 பேர், பள்ளிக் கல்வித் துறையில் 175 ஆசிரியர்கள் என மொத்தம் 25 பேர் மீது பாலியல் புகார் வழக்குகள் உள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நடவடிக்கை குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நாளை பள்ளி கல்வித்துறை செயலர் ஆய்வு செய்ய இருக்கும் நிலையில் அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications