சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் பார் உரிமம் ரத்து அறிவிப்பு.. வாபஸ் பெற்ற தமிழக அரசு.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: சென்னையில் இயங்கி வந்த 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சட்ட விதிகளை மீறியதால் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் லைசன்ஸை ரத்து செய்ததை இப்போது ஆயத்தீர்வை துறை கமிஷனர் திடீரென வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான பார் நடத்தத் தமிழக அரசு உரிமம் வழங்குகிறது. சென்னையில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்கள் இந்த உரிமம் பெற்று பார்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் கூறி சென்னையில் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் பார் உரிமங்களை மதுவிலக்குத்துறை ஆணையர் சமீபத்தில் ரத்து செய்தார்.
அறிவிப்பு: இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி. தி பார்க் (Rattha Somerset, Taj Club House, VVA Hotels (Radisson Blu), Hyatt Regency. The Park) ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்ட விதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.
நட்சத்திர ஹோட்டல்: ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வாபஸ்: இதற்கிடையே இந்த உத்தரவுக்கு எதிராகச் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில், லைசன்ஸை ரத்து செய்ததை இப்போது ஆயத்தீர்வை துறை கமிஷ்னர் கார்த்திகா ஐ.ஏ.எஸ். வாபஸ் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநபர்களை மது அருந்த அனுமதிப்பதே லைசென்ஸ் ரத்திற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டு இருந்தது. இருப்பினும், ஸ்டார் ஹோட்டல்களில் வெளிநபர்கள் மது அருந்தக்கூடாது என எந்த சட்ட விதிகளும் இல்லை என்று கூறுகின்றனர். இதன் காரணமாகவே நட்சத்திர ஹோட்டல்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல தயாராகினர். அதற்குள் லைசன்ஸை ரத்து உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications