புவிசார் குறியீடு.. இதிலும் தமிழ்நாடுதான் நம்பர் 1 இதனால் யாருக்கு இலாபம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்தியாவிலேயே அதிகம் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடுதான்" என்கிறார் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி. கூடவே அவர், புவிசார் குறியீடுகளைப் பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு நாம் ஒன்றிய அரசிடம் எக்கச்சக்கமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார்.

உதாரணமாகச் சொன்னால், 2003 ஆண்டு நான் விண்ணப்பித்த ஒரு பொருளுக்கு இப்போதுதான் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது என்றும் பெருமூச்சு விடுகிறார்.

தமிழ்நாடு திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லி, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் என 45 பொருட்களுக்கு முன்னதாகவே புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது. இதுவே பெரிய பட்டியல்தான்.

அதற்குள் இப்போது மேலும் மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை என 11 பொருள்களுக்கு புவிசார் குறியீடுகளைத் தமிழகம் பெறப்பட்டுள்ளன. ஆக மொத்தமாக இதுவரை 56 பொருள்களுக்கு புவிசார் குறியீடுகள் பற்றப்பட்டுள்ளன.

 Tamil Nadu has been ranked first in terms of Geographical Indication

புவிசார் குறியீடு பெற 45 லட்சம்:

சொல்லப் போனால், இந்திய அளவில் இத்தனை எண்ணிக்கையிலான பொருள்களுக்கு வேறு எந்த மாநிலமும் புவிசார் குறியீடுகளைப் பெறவில்லை.

இந்த வியப்புகள் விலகுவதற்குள் இந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாட்டில் தனித்துவம் மிக்க 15 விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்" வேளாண் அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதற்காக சுமார் 45 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போதும், "தமிழ்நாட்டிற்கே உரிய வேளாண் பொருள்கள் என்ற வகையில் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் விளையும் பொருள் மற்றொரு மாவட்டத்தில் விளைவதில்லை. அந்த சிறப்புள்ள வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலக அளவில் சந்தையில் இடம் பெறச் செய்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டில் சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

இதேபோன்று வரும் ஆண்டிலும் கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெள்ளம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

 Tamil Nadu has been ranked first in terms of Geographical Indication

புவிசார் குறியீடு ஏன் வேண்டும்?

கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயிறு, கரூர் சேங்கல் துவரை, ஜவ்வாது மலை சாமை என இவை ஐந்துக்காக மேலும் 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்தப் புவிசார் குறியீடுகளைப் பெறுவதால் என்ன இலாபம்?

சுருக்கமாகச் சொன்னால், உலகமயமாக்கல் பொருளாதார கொள்கை அறிமுகம் செய்யப்பட்டபோது உலகமே கிராமம் ஆகிவிட்டது என்றார்கள். இன்று அந்த உலகமே கையடக்கமான அளவில் சுருங்கி ஆண்ட்ராய்டு ஆகிவிட்டது. ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தால் உலகத்தின் எந்த மூலைக்கு யாரிடமும் வழி கேட்காமல் நீங்கள் போகலாம். ஆகவே உள்ளூர் சந்தைதான் இன்றைக்கு உலக சந்தை. இதைத்தான் ஆங்கிலத்தில் 'local brand marketing is really global marketing' என்கிறார்கள்.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதன் அடையாளமாகத்தான் இந்தப் புவிசார் குறியீடு பெறுவதில் கவனத்தைச் செலுத்திவருகிறது. இந்தப் புவிசார் குறியீடு வர்த்தகத்திற்குப் பின்னால் இயங்கும் சந்தைப் பற்றி அறிய உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தியிடம் பேசினோம்.

 Tamil Nadu has been ranked first in terms of Geographical Indication

காஞ்சி பட்டுக்கு உதவிய சிலப்பதிகாரம்:

"இந்தப் புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் முதன்முதலாக 1999 ஆம் ஆண்டுதான் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்திற்கான விதிகள் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பின்னர் நடைமுறைக்கு வந்தது.

ஏறக்குறைய இந்த இருபது ஆண்டுகளாக நான் தொடர்ந்து இந்தத் துறையில் இயங்கி வருகிறேன்" என்கிறார் சஞ்சய் காந்தி. புவிசார் குறியீடு பெறுவது என்பது தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழாக வருகிறது. காஞ்சிபுரம் பட்டுக்குத்தான் முதன்முதலாக புவிசார் குறியீடு பெறப்பட்டது. அதற்காக அனைத்து முன்னெடுப்புகளையும் செய்தவர் இவர்தான்.

"ஒவ்வொரு ஊர் சார்ந்த பொருள்களுக்கும் புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால் நானே நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்வேன். அதற்கான ஆவணங்களைத் தேடி எடுப்பேன். காஞ்சிபுரம் பட்டுக்குக் குறியீடு பெறுவதற்காகப் பல ஆவணங்களை எடுத்துக் கொடுத்தேன்.

இறுதியாக மீண்டும் சில ஆவணங்களை அதிகாரிகள் கேட்டார்கள். கடைசியில் 'சிலப்பதிகார'த்தில் இருந்து ஒரு சான்றை எடுத்துச் சமர்ப்பித்தேன். அதன்பின்னர் தான் காஞ்சிபுரம் பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

குஜராத்திலிருந்து புலம்பெயர்ந்துவந்த சௌராஷ்டிரா மக்கள் மதுரையில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் செடிபுட்டா சேலைகளைச் செய்கிறார்கள். மதுரை சுங்கடி சேலை, திருபுவனம் பட்டு சில்க்ஸ் இதை எல்லாம் தயார் செய்கிறவர்கள் அவர்கள்தான். அதற்கு நான் புவிசார் குறியீடு பெற்றுத்தந்திருக்கிறேன்.

 Tamil Nadu has been ranked first in terms of Geographical Indication

10 ஆண்டுகள் வரை காத்திருத்தல்:

இப்படி ஒவ்வொரு பொருளுக்குப் பின்பாகவும் எனது பல ஆண்டு உழைப்பைக் கொட்டி இருக்கிறேன். இதுவே பணியாக நான் கொண்டு இயங்கி வருகிறேன். வேறு துறைகளில் கவனம் செலுத்துவதில்லை.

பத்தமடை பாய்க்குக் குறியீடு பெறுவதற்காக அப்படித்தான் ஆய்வுக்குப் போனேன். அங்கே தாமிரபரணி தண்ணீரில்தான் பாய் செய்வதற்கான கோரையை விளைவிக்கிறார்கள். அந்தக் கோரை தனித்துவமானது. அந்தத் தண்ணீரின் வளத்தால் கோரை செழித்து வளரும்.

ஆகவே அந்தப் பாய்க்குத் தனி தரம் கிடைக்கிறது. அந்த மக்களும் கனகச்சிதமாகப் பாயைச் செய்வார்கள். அந்தப் பாய்த் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் அனைவரும் முஸ்லிம் மக்கள். இதை எல்லாம் ஆவணப்படுத்திச் சமர்ப்பித்தேன்.

இப்படி Geographical indication வாங்குவது என்பது ஐ.எஸ்.ஐ முத்திரை சான்று வாங்குவதைப் போன்று ஒரு விண்ணப்பம் போட்டு வாங்குவது அல்ல. அதற்குப் படிப்படியாகத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

சட்ட சம்பிரதாய நடைமுறைகள் பல உள்ளன. சமீபத்தில் நான் 11 பொருள்களுக்கு ஜிஐ பெற்றுக் கொடுத்திருக்கிறேன் இல்லையா? அதில் ஒன்று மயிலாடி கற்சிற்பம். இது 2003இல் விண்ணப்பிக்கப்பட்டது.

 Tamil Nadu has been ranked first in terms of Geographical Indication

ஜிஐ ஏற்படுத்திய நன்மைகள் என்ன?:

பல வரலாற்றுச் சான்றுகளைக் கேட்டார்கள். தொடர்ந்து பல சான்றுகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். இத்தனை ஆண்டுகளைக் கடந்துதான் இந்தக் கற்சிற்பத்திற்கு இப்போது ஜிஐ கிடைத்திருக்கிறது" என்கிறார் சஞ்சய் காந்தி

இதைப்போன்ற புவிசார் குறியீடு பெற என்ன செலவு ஆகும் என்றோம்.

"அது பொருளுக்குத்தக்க மாறுபடும். காஞ்சிபுரம் பட்டுக்கு மூன்று வகையான கிளாஸ் உள்ளது. அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு கிளாசுக்கு 5 ஆயிரம். மூன்றையும் சேர்த்தால் 15 ஆயிரம்.

அதைத்தவிர ஆவணங்களைத் தேடித்திரட்ட 1 லட்சம் வரை செலவாகும். ஆகவே விண்ணப்பிக்க 5 ஆயிரம் என எடுத்துக் கொள்ளலாம். அதைத்தாண்டிப் பல கட்டமான ஆவண ஆராய்ச்சி சேகரிப்பு செலவுகள் உள்ளன" என்கிறார்

இவரிடம் நீங்கள் போராடிப் பெற்ற புவிசார் குறியீடு எது எனக் கேட்டேன். அதற்கு அவர், "நரசிங்கன்பேட்டை நாதஸ்வரம்தான். சரியாக ஜிஐ பெற 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் போய் அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களைப் பார்த்தபோது 2 பேர்தான் இருந்தார்கள்.

ஒரு பொருளுக்கு ஜிஐ வாங்க, அந்தப் பொருள் தயாரிப்பில் குறைந்தது 15 பேராவது இருக்கவேண்டும். இவர்கள் இருவர்தான் இருந்தனர். எனவே அவரது குடும்பத்தார்களை ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து அதன் வழியே விண்ணப்பித்தேன். அதன்பின்புதான் கிடைத்தது" என்றவரிடம் இந்தக் குறியீடு பெறுவதால் என்ன பயன் என்றோம்?

"சரியான கேள்வி. நான் இந்த நரசிங்கன்பேட்டை நாதஸ்வரத்திற்கு ஜிஐ பெறுவதற்கு முன்னால் அந்தத் தொழிலில் சொற்ப பேர்கள்தான் ஈடுபட்டு வந்தனர். இந்த நாதஸ்வரம் உலக அளவில் தனித்துவமானது. இந்த நாதஸ்வரம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் ஒவ்வொரு ராகத்திற்கும் தனித்தனியாக நாதஸ்வரம் இருந்தது.

 Tamil Nadu has been ranked first in terms of Geographical Indication

மறு உயிர்பெற்ற நரசிங்கன்பேட்டை நாதஸ்வரம்:

இது வந்த பின்னால்தான் எட்டு ராகங்களை இந்த ஒரே நாதஸ்வரத்தில் இசைக்க முடிந்தது. இந்த எட்டு ராகத்திற்கு ஏட்டுத்துளைகள் இதில் இருக்கும். அவ்வளவு சிறப்பான நாதஸ்வரத்தைச் செய்ய ஆள் இல்லை.

நான் குறியீடு பெற்ற பிறகு உலகம் முழுவதும் இருந்து இதன் மீது கவனம் விழுந்தது. இன்று இந்தத் தொழில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். காரணம், பல ஆடர்கள் உலகம் முழுவதும் இருந்து கிடைக்கிறது.

இப்படி ஜிஐ பெறுவதால், நம் உள்ளூர் பொருள் உலக சந்தை மதிப்பைப் பெறும். யாரும் அதன் போலியைத் தயாரிக்க முடியாது. இதே பெயரைப் பயன்படுத்த முடியாது. சட்டரீதியாகப் போலியானவர்களை நாம் தண்டிக்க முடியும். தர நிர்ணயம் கிடைத்துவிட்டால், பொருளைத் தேடி மக்கள் வருவார்கள். அந்தத் தொழில் உள்ளவர்கள் காப்பாற்றப்படுவார்கள். அதைத்தான் தமிழ்நாடு அரசு இப்போது செய்துள்ளது.

உலகத்தரம் என்பது நிரந்தரம்:

மேலும் நமது இந்தியா வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் கையெழுத்துப் போட்டுள்ளது. இதில் மொத்தம் 150 நாடுகள் உள்ளன. நீங்கள் ஒரு பொருளுக்கு ஜிஐ வாங்கிவிட்டால், இந்த நாடுகள் அனைத்தும் தங்குதடை இல்லாமல் கொள்முதல் செய்வார்கள்.

அதனால் விற்பனை அதிகரிக்கும். தயாரிப்பு மீதான நம்பகத்தன்மையை இந்தச் சான்று கூட்டும். அது வணிக ரீதியாக அதில் ஈடுபட்டு வருபவர்களுக்குப் பல நன்மைகளை உருவாக்கித் தரு" என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+