நாய்க் கடிக்கு தடுப்பூசி மட்டும் போதாது! உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.. அப்போ என்ன தான் செய்யணும்
சென்னை: நாய்கள் கடித்தால் உடனடியாக ரேபிஸ் வேக்சின் போடச் சொல்வார்கள். ஆனால், ரேபிஸ் வேக்சின் போட்ட பிறகும் கூட சமீபத்தில் சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதற்கிடையே நாய்க் கடி தொடர்பாகவும் ரேபிஸ் சிகிச்சை தொடர்பாகவும் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் பல முக்கிய பாயிண்டுகள் விளக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சமீப காலமாகவே நாய்க் கடி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. சாலைகளில் செல்லும் குழந்தைகளைக் கூட நாய்கள் கடித்துவிடுகின்றன. பல நேரங்களில் நாயைத் தொல்லை செய்தால் மட்டுமே நாய் திரும்பக் கடிக்கிறது. ஆனால், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் சும்மா செல்வோரைக் கூட கடித்துவிடுகிறார்கள்.

நாய்க்கடி
இப்படி நாய்க்கடி என்பது நமக்கு மிகப் பெரிய சிக்கலாகவே மாறியுள்ளது. நாய்க் கடி சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. பொதுவாக எதிர்பாராத விதமாக நாய் கடித்துவிட்டால் முதலில் ரேபிஸ் வேக்சினை தான் போடச் சொல்வார்கள். ஏனென்றால் மனிதர்களை ரேபிஸ் நோய்த் தாக்கினால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், நமது நாட்டில் நாய்க்கடிக்கு வேக்சின் எடுத்துக் கொண்ட பிறகும் கூட உயிரிழப்புகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் சில மாதங்களில் இரு சிறார்கள் இதுபோல உயிரிழந்துள்ளனர். அதாவது நாய்க் கடிக்காக மருத்துவமனைக்கு வந்த அவர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அதையும் தாண்டி அவர்கள் உயிரிழந்துள்ளனர். இது வேக்சின் குறித்த கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.
வழிகாட்டுதல்கள்
இதற்கிடையே தமிழ்நாடு சுகாதாரத்துறை ரேபிஸ் சிகிச்சை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கடித்த இடத்தை முறையாகக் கழுவாமல் இருப்பது, தாமதமாகச் சிகிச்சைக்கு வருவது கூட உயிருக்கு ஆபத்தாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேபிஸ் வேக்சின் மூன்று நாட்கள் போட வேண்டும். அந்த வேக்சின் அட்டவணையை மீறினாலும் கூட அது உயிருக்கு ஆபத்தாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசிகளை அறிவுறுத்தப்பட்ட குளிர்ச்சியான இடங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்
பொதுவாக நாய் கடித்தால் காயம் ஏற்படும் பகுதியை உடனடியாக 15 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்ய வேண்டும். ஓடும் தண்ணீர் (குழாய்த் தண்ணீர்) சோப் போட்டு நாய் கடித்த இடத்தைக் கழுவ வேண்டும். மேலும், நாய் கடித்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். பாதிக்கப்பட்டவர்கள் 28 நாட்களுக்குள் 3 டோஸ்களாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டு விட்டால் அது பலன் தராது. எனவே, முழுமையாக மூன்று டோஸ் வேக்சின்களையும் நிச்சயம் போட வேண்டும்.
ரேபிஸ்
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் கடித்தால் மட்டுமே நமக்கு ரேபிஸ் வரும் அதுவே உயிருக்கு ஆபத்தாக மாறும். பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியை ஆண்டுக்கு ஒரு முறை போட்டுவிடுவார்கள். ஆனால், வீதிகளில் சுற்றும் நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்காது. எனவே, அதற்கு ரேபிஸ் நோய் இருக்கிறதா.. இல்லையா என்பது தெளிவாகத் தெரியாது. இதனால் தெருநாய் கடித்தால் சோப் போட்டு கழுவியவுடன் முதலில் மருத்துவமனைக்குச் செல்வதே சரியானதாக இருக்கும்.
மேலும், நாய்க் கடிக்கு ரேபிஸ் வேக்சின் போட்டுவிட்டால் மட்டும் பத்தாது.. அதை லேட்டாக போடக்கூடாது. நாய் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அறிகுறி தெரிந்த பிறகு ஆரம்பித்தால் நிச்சயம் உயிரை காப்பாற்ற முடியும் என சொல்ல முடியாது.












Click it and Unblock the Notifications