கல்லூரி பேராசிரியர்களுக்கு நல்ல செய்தி.. பல நாள் கோரிக்கை நிறைவேறுது.. அமைச்சர் அறிவிப்பு
சென்னை: அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் நவம்பர் 25-ந்தேதிக்குள் நடத்தப்படும் என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதற்காக ஆன்லைன் மூலம் பெறப்படும் ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், தொழில்நுட்பக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு இன்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு சிறப்பு பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்று உள்ளன.

ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளை பரிவுடன் ஏற்று, நடப்பு ஆண்டில் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மேற்கண்ட கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நவம்பர் 25-ந்தேதிக்குள் நடத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலம் பெறப்படும் ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் இன்னமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதனிடையே நடப்புக் கல்வியாண்டிலும், அடுத்த கல்வியாண்டிலும் பெருமளவிலான உதவிப் பேராசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அதன்பிறகு அரசு கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1000 உதவிப் பேராசிரியர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி நெருக்கடி என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்றும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்மேலாண்மை ஆகிய துறைகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள நிதி தான் பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications