கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி? உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் மாற்றம்! புதிய ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ்!
சென்னை : கள்ளக்குறிச்சி மர்ம மரண விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது.
பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம்
இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதோடு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

உளவுத்துறை ஐஜி மாற்றம்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு உளவுத்துறையின் போதிய கண்காணிப்பின்மையே காரணம் என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டினர். மாணவி இறந்த நாளிலிருந்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், உளவுத்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என புகார் எழுந்தது. இந்நிலையில் உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளது காவல்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில்வேலன் நியமனம்
ஆசியம்மாளுக்குப் பதிலாக உளவுத்துறை ஐ.ஜி.யாக காத்திருப்பு பட்டியில் இருந்த செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமின்றி மேலும் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, ஈரோடு மாவட்டம் பவானி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ், விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், ஆகியோர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் மாற்றம்
இதே போல சென்னை பூக்கடை இணை கமிஷனர் மகேஸ்வரன் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், ஆவடி ஆயுதப்படை எஸ் பி ராதாகிருஷ்ணன் சென்னை சைபர் கிரைம் இணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆகியோர் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications