96 மணி நேரம்.. "வெலவெலத்து" போன அதிமுக.. எடப்பாடிக்கு ஏகப்பட்ட பிரஷர்.. கைவிடப்பட்டாரா ஜெயக்குமார்?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒரு பக்கம் அதிமுகவிற்கு எதிராக வந்த நிலையில் இன்னொரு பக்கம் வேறு சில சம்பவங்களும் அக்கட்சியை ஆட்டிப்பார்த்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தொடர் சம்பவங்கள் பெரிய அழுத்தத்தை கொடுத்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் அதிமுக ஒன்றை கூட இந்த முறை கைப்பற்றவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது.

26 வருடம்
இது அதிமுகவிற்கு கடந்த 26 வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி ஆகும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு தோல்வியை அதிமுக எதிர்கொள்ளவில்லை. முதல்முறையாக ஜெயலலிதா இல்லாத வெறுமையை அக்கட்சியை எதிர்கொண்டு உள்ளது.கட்சிக்கு சரியான ஆளுமையான தலைமை இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் சமூக வலைத்தளங்களில் குமுறும் அளவிற்கு அதிமுகவின் இந்த தோல்வி அமைந்து இருக்கிறது.இதனால் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

அழுத்தம்
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்றாலும் எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் என்பதால் அதிமுகவின் இந்த சரிவிற்கு எடப்பாடி முக்கியமான காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். முக்கியமாக சொந்த மாவட்டம் சேலத்திலும், அதிமுகவின் கோட்டை கொங்கிலும் திமுகவின் எழுச்சியும், அதிமுகவின் வீழ்ச்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் இடையே கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் 96 மணி நேரத்தில் ஏகப்பட்ட பிரஷர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுவிட்டது.

96 மணி நேரம்
இந்த 96 மணி நேரம் தொடங்கியது கடந்த வெள்ளிக்கிழமை மாலை. அப்போதுதான் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணி கோவையில் கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி அவர் செய்த தர்ணா காரணமாக கைது செய்யப்பட்டு அன்று இரவுதான் விடுதலை செய்யப்பட்டார். அன்று இரவு கோவையில் அதிமுக "அவுட்" ஆவதற்கான அறிகுறிகள் தெரிந்துவிட்டன. கட்சியினர் பவர்புல் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட போதும் அதை பற்றி பேட்டி கொடுப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் எடப்பாடி.

அடுத்த சம்பவம்
இப்படிப்பட்ட நிலையில்தான் ஜெயக்குமார் சம்பவம் நடைபெற்றது. ஜெயக்குமார் சென்னையில் திமுக நிர்வாகியை அரைநிர்வாணமாக அடித்து அழைத்து சென்ற வீடியோ வைரலானது. திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக புகார் அளித்த நிலையில் ஜெயக்குமாரின் இந்த வீடியோ அதை எல்லாம் மறைய செய்து லைம்லைட்டில் இடம் பிடித்தது. விளைவு கடந்த திங்கள் கிழமை மாலை ஜெயக்குமாரும் கைது செய்யப்பட்டார். இதுவும் அந்த 96 மணி நேர இடைவெளியில்தான்.

கைது எதிர்பார்க்கவில்லை
இந்த கைதை அதிமுக தலைமை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கேஸ் போடுவார்கள் என்று மட்டும் எதிர்பார்த்த நிலையில் எடப்பாடிக்கு இந்த வழக்கு ஷாக்காக மாறியது. அதோடு தேர்தல் முடிவை காரணம் காட்டி இவரின் பெயிலும் மறுக்கப்பட்டது. வீட்டிற்கு உள்ளேயே சென்று ஜெயக்குமாரை போலீஸ் கைது செய்யும் என்று எடப்பாடி கொஞ்சம் கூட நினைக்கவேயில்லை. இப்படி இடி மேல் இடியாக செய்திகள் வந்த போதுதான் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட்டும் வந்தது.

21 மாநகராட்சி
21 மாநகராட்சி தோல்வி, கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல தோல்வி, சென்னையில் சில இடங்களில் அதிமுகவை விஞ்சிய பாஜக என்று இடிமேல் இடியாக நேற்று அதிமுகவிற்கு செய்திகள் வந்தன. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய இந்த பிரஷர் நேற்று மாலை வரை 96 மணி நேரம் விடாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அதிகரித்துக்கொண்டே சென்றது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆங்காங்கே அதிமுக தலைமையில் மாற்றம் வேண்டும். சசிகலா உள்ளே வர வேண்டும் என்றெல்லாம் கோஷங்கள் எழ தொடங்கி உள்ளன.

ஜெயக்குமார்
முன்னதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு வெளியே வந்த போது அவரை இபிஎஸ் நேரில் சென்று கூட சந்திக்கவில்லை. இப்போதும் அதேபோல் ஜெயக்குமாரை கைதை பற்றி அதிமுக பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. கைதான அன்று ஏற்பட்ட பரபரப்பு மறுநாளே அடங்கி போனது. இன்று அவருக்கு பெயில் கிடைக்காததை பற்றி கூட அதிமுக அலட்டிக்கொள்ளவில்லை. ஜெயக்குமாரை அதிமுக அப்படியே கைவிட்டுவிட்டதோ என்று விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது..

ஜெயலலிதா
ஜெயலலிதா அல்லது வலுவான ஒரு தலைமை இருந்திருந்தால் அவ்வளவு தொண்டர்கள் கொண்ட அதிமுக இவ்வளவு மோசமான தோல்வியை பெற்று இருக்குமா என்பது கேள்விதான். அதோடு அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கைதாவதும் தொடருமா என்பதும் கேள்விதான். அடுத்தடுத்த விவகாரங்களை எதிர்கொள்ள முடியாமல் அதிமுகவின் இரட்டை தலைமை கொஞ்சம் தடுமாறுகிறதோ என்ற விவாதத்தை இந்த 96 மணி நேர சம்பவங்கள் ஏற்படுத்தி உள்ளன.











Click it and Unblock the Notifications