நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
சென்னை: தமிழக தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்த வாக்கு சதவீதத்திற்கும், தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கும் வாக்கு சதவீதத்திற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்திருப்பதை பட்டியலை நன்கு ஆய்வு செய்து பார்த்த போது தெரியவந்துள்ளது. அந்த வகையில் விஐபி தொகுதிகளில் இரு பட்டியலுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
18வது மக்களவைக் காண தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது நேற்று தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

கடுமையான கோடை வெயிலுக்கு இடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்த நிலையில் தமிழகத்தில் சுமார் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்கு சதவீதம்: நேற்று இரவு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பில், தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்தது. இதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு சதவீதத்தில் குளறுபடி: இதனால் வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் நேற்று மக்களவை தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்திலும், தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்திலும் பெரும் வேறுபாடு இருப்பதால் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்திருந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று சுமார் 3% குறைத்து அறிவித்துள்ளது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறைப்பு: இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது இறுதிக் கட்ட வாக்கு நிலவரம் தெரியவரலாம். இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்த வாக்கு சதவீதத்திற்கும், தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கும் வாக்கு சதவீதத்திற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்திருப்பதை பட்டியலை நன்கு ஆய்வு செய்து பார்த்த போது தெரியவந்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 10.97 சதவீத வாக்குகள் தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஸ்ரீபெரும்புதூரில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 9.58 சதவீத வாக்குகள் குறைத்து காட்டப்பட்டு இருக்கின்றன
பெரிய வித்தியாசம்: வடசென்னை தொகுதியில் 9.13 சதவீத வாக்குகளும், சிவகங்கை 7.11 சதவீத வாக்குகளும், மத்திய சென்னையில் 13.44 சதவீத வாக்குகளும், நெல்லையில் 6.36 சதவீத வாக்குகளும், கோவையில் 6.36 சதவீத வாக்குகளும், கன்னியாகுமரியில் 4.69 சதவீத வாக்குகளும் குறைத்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல திருச்சியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 3.79 சதவீத வாக்குகளும் மதுரையில் 7.06 சதவீத வாக்குகளும், தென்காசியில் 3.51 சதவீத வாக்குகளும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிப்பு: அதே நேரத்தில், தர்மபுரியில் 6.04 சதவீத வாக்குகளும், சேலத்தில் 4.85 சதவீத வாக்குகளும், கரூரில் 4.56 சதவீத வாக்குகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட அதிகரித்து காட்டப்பட்டிருக்கிறது. இதே போல நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 3.87 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 3.58 சதவீத வாக்குகளும் அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது வாக்கு சதவிதத்தில் சுமார் 3 சதவீதம் மாறுபட்டுள்ளது.
விஐபி தொகுதிகளில் மாற்றம்: இதேபோல், பதற்றமான வாக்கு சாவடிகளிலும் விஐபி போட்டியிட்ட தொகுதிகளிலும் வாக்கு சதவீதத்தில் பெரும் மாறுபாடு இருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜன், தயாநிதி மாறன், கனிமொழி கருணாநிதி, ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு சதவீதத்தில் பெரும் மாறுபாடு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் திமுகவின் டிஆர் பாலு, பாஜகவின் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, விஜய் வசந்த், துரை வைகோ, ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளிலும் வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications