ஒழியட்டும் சனாதனம்! மன்னிப்பு கேட்க முடியாது-மிரட்டலுக்கு அச்சமில்லை! - உதயநிதி ஸ்டாலின் "கெத்து"
சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இந்த பிரச்சனையில் விடப்படும் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்; மன்னிப்பும் கேட்க முடியாது என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு கடந்த 3 நாட்களாக இந்தியாவின் பல மாநில பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி தலைவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். சில மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன; வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை அறிவித்திருக்கிறார்.
இருந்த போதும் இந்த பிரச்சனை வெடித்தது முதலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது நிலைப்பாட்டில் திட்டவட்டமான உறுதியை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தியா முழுவதும் பேச்சு: சனாதன ஒழிப்பு பேச்சு சர்ச்சை குறித்து தூத்துக்குடியில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இரண்டு நாட்களாக நீங்கள் கேள்விப்பட்டு கொண்டிருப்பது சனாதனம் என்ற வார்த்தையை தான். அந்த நிகழ்ச்சியே சனாதனம் எதிர்ப்பு மாநாடு தான். அங்கு போய் நான் சனாதனத்தை வாழ்த்தவா முடியும் . சிலருக்கு வயிற்று எரிச்சலில் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைக்கு ரூ.10 கோடி விலை: உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் என் தலைக்கு பத்து கோடி ரூபாய் விலை பேசி உள்ளார். எதற்கு பத்து கோடி. 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன். பேரறிஞர் அண்ணா, பெரியார் சமூகநீதி காப்பதற்காகவே திமுகவை தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் வெளியே வர முடியாது, தொட்டால் தீட்டு என இருந்ததை பெரியார் ஒழித்து கட்டினார். என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்.
கருணாநிதி பேரன்: இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கருணாநிதி தலையை சீவினால் 1 கோடி என்று விலை வைத்தார். நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கருணாநிதி கேட்டார்கள். ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கருணநிதியின் பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன்.
சனாதனம் எது?: முன்னதாக நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: நான் பேசிய உரையாடல்கள் தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையதளங்களில் உள்ளது. அந்த வீடியோ காட்சியை பாருங்கள். அதில் நான் கூறியதாக கூறும் வார்த்தை இருந்தால் கூறுங்கள். சனாதனம் என்றால் எல்லாம் நிலையானது, எதையும் மாற்ற முடியாது என்று அவர்களே தெரிவிக்கிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்கள். குறிப்பாக பல விளையாட்டு வீராங்கனைகள் இங்கு உள்ளார்கள். ஒரு காலத்தில் கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டும் என்று தெரிவித்தார்கள். இவையெல்லாம் இன்றளவும் பின்பற்றப்படுகிறதா என்ன அவை அனைத்தும் மாற்றப்பட்டு விட்டது.
மத எதிர்ப்பு பேச்சு அல்ல: பல்வேறு போராட்டங்கள் நடத்தி இவை அனைத்தும் மாற்றப்பட்டது. அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நோக்கிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை கொல்வது என்றா அர்த்தம்? மாறாக காங்கிரசின் கொள்கைகளை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். சமத்துவம் சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பேசவில்லை மாறாக மதத்திற்குள் உள்ள சாதி பாகுபாடுக்கு எதிராகவே பேசுவேன்.
இனப்படுகொலை பேச்சா?: இதேபோல நேற்று முன்தினம் தமக்கு எதிரான பிரசாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது: ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் பேசினேன். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா. எல்லாருக்கும் எல்லா கிடைக்க வேண்டும் என்பதே திராவிட கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. மேலாடை அணிய கூடாது. இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல், வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர். வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications