துணை முதல்வர் உதயநிதி..லேட் ஆக்க வேண்டாம்! ஸ்டாலின் முன் கோரிக்கை வைத்த சீனியர்! அடுத்த நாளே ஆக்ஷன்
சென்னை : தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று நடைபெற்ற திமுக பவள விழா மாநாட்டில் எஸ்எஸ் பழனி மாணிக்கம் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வர இருப்பது திமுகவினரை உற்சாகமடைய செய்துள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது.
ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி நில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து பல மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்துவிட்ட நிலையில், இன்னும் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் நேற்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக இந்தாண்டு முதன்முறையாக ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டு, அவ்விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,"உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார். அப்போது மேடையின் கீழ் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் திமுக தொண்டர்களும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 11:30 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் திமுகவினர் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுவரை உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என பல அமைச்சர்கள் தொலைக்காட்சி பேட்டிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலேயே கட்சியின் சீனியரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் காலம் தாழ்த்தாதீர்கள் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது திமுகவினரை உற்சாகம் அடைய வைக்கும் அறிவிப்பு வர இருக்கிறது. இதனால் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications