தமிழ்நாடு அரசின் தரமான மூவ்.. நீண்ட கால பிரச்சனைக்கு வர போகுது தீர்வு.. நல்ல முடிவு தான்
சென்னை: பொதுமக்கள் எதிர்கொண்டு இருந்த ஒரு சிக்கலுக்குத் தமிழ்நாடு அரசு ஒரு புதிய தீர்வை கொடுத்துள்ளது. இதற்காகக் கட்டுமான விதிகளில் முக்கியமான மாற்றத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இது நீண்ட காலமாக மக்கள் எதிர்கொண்டு வந்த சிக்கலுக்குத் தீர்வை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மால் அல்லது பெரிய கட்டிடங்களுக்குச் செல்லும்போது பல இடங்களில் நமக்கு சிக்னல் கிடைக்காது. இதனால் அங்கு யுபிஐ மூலம் கட்டணம் செலுத்துவது முதல் சாதாரண போன்கால் பேசுவது முதல் கூட பல சிக்கல்கள் ஏற்படும். இது கடந்த சில காலமாகவே பொதுமக்களிடையே முக்கியமான ஒரு பிரச்சினையாகவே உருவெடுத்து இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு இது தொடர்பாகப் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பிரச்சினை
அதாவது பெரிய குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்களில் மொபைல் நெட்வொர்க் கவரேஜ் மற்றும் அதிவேக இணையச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கட்டிட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகள், 2019'இன் கீழ், பெரிய கட்டுமான திட்டங்களுக்குக் கட்டாயத் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு தேவையைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு
புதிய விதிகளின்படி, 750 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களில் நெட்வொர்க் உபகரணங்களுக்குப் பிரத்தியேகத் தொலைத்தொடர்பு அறைகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். 2,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமானங்களுக்கு, தகுதியான ஆலோசகரால் சான்றளிக்கப்பட்ட விரிவான தொலைத்தொடர்பு சேவைத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.. மேலும், கட்டமைப்புகள் நீடித்ததாகவும், நீர், தூசு புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த டெலிகாம் நெட்வொர்க்கிற்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏன் முக்கியம்
இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகள் கட்டுமானங்கள் மட்டுமின்றி மனைப்பிரிவுகளுக்கும் பொருந்தும். தொலைத்தொடர்பு வழித்தடங்கள் சேவைக்காகக் குறிக்கப்பட வேண்டும். மனை திட்டங்களை வகுக்கும்போதே சாலை ஓரங்களில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். இதனால் எதிர்காலத்தில் இடையூறின்றி கேபிள்கள் பதிக்கலாம்.
பெரிய கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கும்போது அழைப்பு துண்டிப்புகள் அடிக்கடி ஏற்படும் நிலையில், அதைக் குறைக்கவே இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமானங்களில் சிக்னல் தரம் மேம்படும். இணைய வசதி வேகம் அதிகரிக்கும். மேலும், கட்டுமானத்தின்போதே இதைச் செய்ய வேண்டும் என்பதால்.. அதன் பிறகு தேவையற்ற பள்ளம் தோண்டுதல் மற்றும் கேபிள் பதிப்புப் பணிகள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications