நல்லா புரிஞ்சிக்கோங்க.. 3 நாடுகளை தவிர்த்த பிற முஸ்லீம்களுக்கு குடியுரிமை உண்டு! சிஏஏ பற்றி அண்ணாமலை
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி தெரியாமலேயே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
அண்ணாமலை கூறியதாவது:- சிஏஏ பற்றி தெரியாமலேயே எதிர்த்து பேசுகிறார்கள். சிஏஏ பற்றி தெரியாமலேயே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. சிஏஏவால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச இஸ்லாமியர்களுக்கு எந்த பதிப்பும் இல்லை. சிஏஏ யாருக்கும் குடியுரிமையை மறுக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு பொருந்தும் என்று நான் சொல்லியிருக்கிறேன்.

இந்த 3 நாடுகளில் இருக்கக் கூடிய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த 3 நாடுகளும் அடிப்படையாக இஸ்லாமியர்கள் நாடு. இஸ்லாமியர்களுக்காக அங்கு சட்டம் இருக்கு. சொத்துக்காக தனிச்சட்டம் இருக்கு. எல்லாமே அவங்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட சட்டம் இருக்கு. இது அந்த நாடு, அந்த நாட்டினுடைய சட்ட திட்டம். இதில், தப்பு சரி என்று நான் ஏதும் சொல்லவில்லை.
இந்த 3 நாடுகளும் தன்னை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்து உள்ளது. இதனால் அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் தவிர அங்கு இருக்கின்ற மற்ற எல்லா மதமும், குறிப்பாக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், சீக்கியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. உதாரணத்திற்கு ஒரு இஸ்லாமியர் பிரான்சில் இருந்து வருகிறார். அவருக்கு குடியுரிமை மறுப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை.
முற்றிலும் தேவையற்றது குடியுரிமை திருத்த சட்டம்.. தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்.. மு.க ஸ்டாலின்
11 ஆண்டுகள் இந்தியாவில் இருக்க வேண்டும். உங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று சொல்கிறோம். வியட்நாமில் இருந்து ஒரு இஸ்லாமியர் வருகிறார் என்றால் அவரும் 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் குடியுரிமை கொடுப்போம். யாருக்கும் மறுக்கவில்லையே. இந்த மூன்று நாடுகளும் தன்னை இஸ்லாமியர்கள் நாடு என்று சொல்லியதால், அங்கு இருக்கக்கூடிய இஸ்லாம் மதம் இல்லாத மற்ற மதத்திற்கு மட்டும் கொடுத்திருக்கிறோம். இதனை எந்த அடிப்படையில் மதத்திற்கு எதிரி என்று சொல்லலாம்.
இன்றைக்கு இலங்கை வந்து தன்னை ஒரு சிங்களர் ரிபப்ளிகாக டிக்ளேர் செய்யவில்லை. ரணில் விக்ரமேசிங்கேவிடம் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த கோரி சொல்லியிருகிறார் பிரதமர் மோடி. ஜெய்சங்கரும் சொல்லியிருக்கிறார். 13 வது சட்டத்திட்டம் இலங்கையில் வந்துவிட்டால் தமிழர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். அதிகாரப்பூர்வமாக ஒரு நாடு தன்னை இந்த மதத்தின் நாடு, அந்த மதத்தின் நாடு என்று டிக்ளேர் பண்ணாத பட்சத்தில் எப்படி தனியாக அவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் பொருந்தும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே இந்த சிஏஏ சட்டமாகும்.
அந்த நாடுகளில் மத சிறுபான்மையினராக உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கம். இந்த சட்டம் மூலம் மத துன்புறுத்தல் காரணமாக அந்த நாடுகளில் இருந்தோர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால், இந்தியாவுக்கு வந்தவர்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அதாவது தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடமும், கடந்த 14 வருடங்களில் குறைந்தது ஐந்து வருடங்களும் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்படும், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன. இதனால் கடந்த 4 வருடமாக இது பற்றி அறிவிப்பு ஏதும் இன்றி இருந்தது.
இந்த நிலையில், நேற்று குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. தமிழகம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று கூறினார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிஏஏ பற்றி தெரியாமலே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து பேசுவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications