ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியின் முஸ்லீம்கள் குறித்த கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை எதிர் எதிர் துருவங்களாக இருந்த திமுக-அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன அறிக்கை விடுத்துள்ளன.
தமிழகம் உள்ள 39 தொகுதிகள் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜஸ்தானில் நடந்த பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இந்தியாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடி: ராஜஸ்தானில் பேசிய பிரதமர்"அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது." என பேசியிருந்தார்.
கடும் விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பிரதமரின் கருத்துக்கு கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மத ரீதியாக பேசி தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி: இந்நிலையில் பிரதமர் மோடியின் முஸ்லீம்கள் குறித்த கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்." என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்று சேர்ந்த கட்சிகள்: தமிழக அரசியல் களத்தில் எதிரி எதிர் துருவங்களாக இருந்தாலும் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த கருத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இதே போல தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஒன்றாக கரம் கோர்த்து பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications