விஜய் வாங்குகிற வாக்கு சதவீதத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியல் சூழல் மாறும்.. திருமாவளவன் பேச்சு
சென்னை: இப்போது கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது என்ற தோற்றம் இருக்கிறது, ஆனால் இது உண்மையில்லை என்று தொல் திருமாவளவன் கூறினார். மேலும் பேசிய அவர், "தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் வாங்குகின்ற வாக்கு சதவீதத்தை பொறுத்து தமிழ்நாட்டு அரசியல் சூழல் மாறும்" என கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் என தொண்டர்கள் தங்களுக்குள்ளே விவாதம் வைத்து வருகிறார்கள். வாக்குசதவீதமும் அதிகரித்து இருக்கிறது என தவெகவினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் திருமாவளவன் தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

நடந்து முடிந்துள்ள தேர்தலில் வழக்கமான வாக்குப் பதிவு தான்.. இதில் வியப்பு அடைவதற்கு ஏதும் இல்லை. எஸ்.ஐ.ஆர் மூலமாக ஏராளமான, லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டன. அந்த வாக்குகள் நீக்கம் செய்யப்படாமல் இதே வாக்கு சதவீதம் பதிவாகி இருந்தால் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என்று சொல்ல முடியும்.
ஆனால் எஸ்.ஐ.ஆர் மூலம் இதுவரை பதிவு செய்யப்படாமல் இருந்த வெறுமனே எண்ணிக்கையில் மட்டும் இருந்த வாக்குகள் லட்சக்கணக்கில் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இப்போது கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது என்ற தோற்றம் இருக்கிறது, ஆனால் இது உண்மையில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய வாக்காளர்கள் 20 முதல் 25 லட்சம் பேர் இணைவார்கள். இது வாக்கு எண்ணிக்கையில் கூடும்.
அந்த மாதிரி தான் இந்த முறையும், இந்த தேர்தலில் கூடுதலாக புதிய வாக்காளர்கள் 20 முதல் 25 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அவ்வளவு தான். இந்த முறையும் திமுக தான் வெற்றி பெறும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த பிறகு நாங்கள் இதனை உணர்கிறோம்" என்றார்.
தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையும் என திருமாவளவன் கூறியதாக தகவல் பரவுகிறதே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "நான் அப்படி சொல்லவில்லை. அது யூகங்களால் அப்படி பலரும் பரப்பினார்கள். தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல் மாறும் என்று தான் நான் சொல்லியிருந்தேன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் வாங்குகின்ற வாக்கு சதவீதத்தை பொறுத்து தமிழ்நாட்டு அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லியிருப்பேன்.. அவ்வளவு தான்.. தேர்தல் முடிவு வரட்டும்.." என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications