தட்டித் தூக்கிய தமிழக அரசு..இன்று முதல் ரூ.3000+ பொங்கல் பரிசு! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன், ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று(ஜனவரி 8) பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை, தொகுப்பு, வேட்டி சேலை ஆகியவை வழங்கப்பட்டது. சென்னை ஆலந்தூரில் உள்ள ரேசன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது
இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட உடனேயே, பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கேற்றபடி தங்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று வருகின்றனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகின்றன. இதனுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையும் சேருவதால், மக்கள் இந்தத் திட்டத்தை வரவேற்கும் நிலையில் உள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
இந்தத் திட்டம் சீராக நடைபெறுவதற்காக கூட்டுறவு துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கடந்த பல நாட்களாக தீவிரமாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதமாக அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட வேட்டி மற்றும் சேலைகள் பெரும்பாலும் மக்களிடம் சென்றுவிட்டதாகவும், சில இடங்களில் மீதம் இருந்த பொருட்கள் குடோன்களில் இருப்பதாகவும், அவற்றை இந்த ஆண்டும் தேவைக்கேற்ப வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரேசன் கடைகள்
கரும்பு விநியோகத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 முதல் 80 சதவீத அளவுக்கு கரும்புகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. கரும்பு பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மீதமுள்ள கரும்புகள் பகுதிவாரியாக தொடர்ந்து அனுப்பப்படும் எனவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்கள்
ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படும் இடங்களில், அதிக நெரிசலை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையை வழங்கும் போது, பயனாளிகள் முன்னிலையில் தெளிவாக எண்ணி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நடைபெறும் வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை நடவடிக்கை
மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் நிலையில், அவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று முடிவடைந்துள்ள நிலையில், டோக்கன் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடை ஊழியரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் குறிப்பிடும் தேதியில் பொருட்களையும் ரொக்கத்தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications