கோவை, நீலகிரியில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... அரபிக்கடலில் பலத்த காற்று வீசும்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூர், அவலாஞ்சி மேல் பவானி, வால்பாறையில் கனமழை நீடிப்பதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரியாறு, பொள்ளாச்சி, திருமூர்த்தி அணை, சென்னை, திருவள்ளூரிலும் நேற்றிரவு மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் ஜூலை 18ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications