முதல் விதைபோட்டது கலைஞர் - உறுப்பு தானத்தில் இந்தியாவுக்கே பாடம் எடுத்த தமிழ்நாடு
சென்னை: பலவிதங்களில் இந்தியாவில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. பல ஆண்டுகள் முன்னால் செயல்பாட்டுக்கு வந்த பல திட்டங்களை இன்றுதான் ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமிழ்நாட்டில் செயல்படுத்திய உறுப்பு தான மாற்று அறுவைச் சிகிச்சை திட்டம் கூட இந்திய அளவில் ஒரு முன்னோடி திட்டம்தான்.
அன்றே அதற்கான விதையை அவர் போட்டதால்தான், இப்போது தேசிய அளவில் தமிழ்நாடு உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் திட்டத்தை மு.கருணாநிதி அறிமுகம் செய்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தவர் மருத்துவர் அமலோற்பவநாதன். தமிழ்நாடு இன்று புரிந்துள்ள இந்தச் சாதனையைப் பற்றி என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம்.

மு.கருணாநிதியின் தொலைநோக்கு:
"உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் தமிழக மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உருவாகி இருக்கிறது. பழைய மனநிலை மக்களிடம் இல்லை. இறந்த ஒருவரின் உறுப்புக்களைத் தானமாக அளிப்பதன் மூலம் வேறு பல உயிர்களை வாழவைக்க முடியும் என்பதற்காகப் பலரும் தானம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால், இன்னும் நிறைய அளவில் நாம் முன்னேறி வர வேண்டி உள்ளது.
இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
இன்றைக்குக்கூட இந்திய அளவில் ஒரு தலைசிறந்த திட்டம் எது என்றால், அது தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட உறுப்பு தானம் திட்டம்தான் என்று நான் உறுதியாகச் சொல்வேன்" என்கிறார்.
அவரிடம் இன்றைக்கு இந்த உறுப்பு தான அறுவைச் சிகிச்சை பற்றி அதிக அளவில் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அன்றைக்கு மு.கருணாநிதி இதனைச் செயல்படுத்தும் போது மக்களிடம் அறியாமைகள் நிறைய இருந்திருக்கும். அதற்கு இடையே அவர் தொலைநோக்குடன் இதனைச் செயல்படுத்தியுள்ளார். ஆகவே அது குறித்து விளக்க முடியுமா என்றோம்.
அதற்கு அவர், "கட்டாயம். அன்றைக்கு அவரிடம் இருந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்றைக்கு லட்சக் கணக்கான பேருக்கு புதிய உயிரையே கொடுத்துள்ளது. இந்திய அளவில் பலரும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் என இதை நீங்கள் சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்தான் அதற்கு முழுக் காரணம். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
மு.கருணாநிதி இதை அறிமுகம் செய்யும் போதே எந்த மாநிலத்திலிருந்து வேண்டுமானாலும் வந்து தமிழ்நாட்டில் உறுப்பு தான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு செல்லலாம் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு முன்மாதிரி வேறு இல்லை:
ஆகவே பல வெளிமாநில மக்கள் வந்து பயன்பெற்றனர். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவசமாகப் பயன்பெற்றனர். அது மாபெரும் சாதனை இல்லையா?" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.
"நான் தான் அந்தத் திட்டத்தினை ஆரம்பித்தேன். முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தோம். அப்போது 12 மணிநேரம் அந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.
ஆனால், இப்போது ஆறு மணிநேரத்தில் அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துவிடக் கூடிய அளவுக்கு நவீன உபகரணங்கள் வந்துவிட்டன. ஆனால், அன்றைக்கு அது பெரிய சாவால்.
நான் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சைகளை என் தலைமையிலேயே செய்துள்ளேன். அதில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைதான் அதிகம். ஏனென்றால் இந்திய அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம். சர்க்கரை நோயினால் பலரும் கிட்னி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆனால், இப்போது ஈரல், இதயம், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை கூடச் செய்கிறார்கள். அதில் உலகளவில் இந்த அறுவைச் சிகிச்சையை மிகத் தரமாகத் தமிழ்நாட்டில் செய்கிறோம். அதுவே உண்மை" என்றார்.
அவரிடம் தமிழ்நாட்டில் நடந்த மறக்க முடியாத உறுப்பு தான அறுவைச் சிகிச்சை பற்றி நினைவு இருக்கிறதா? எனக் கேட்டோம். அவர், "க்ரீன் காரிடார் போட்டு, சாலையில் வாகனங்களை எல்லாம் நிறுத்திவிட்டு ஒருவருக்காக ஒருமுறை விமானத்தின் வழியே உடல் உறுப்பைக் கொண்டு வந்து மாற்றி, அதில் வெற்றியும் பெற்றோம். அது நாடு முழுவதும் பெரிதாகப் பேசப்பட்டது.
இத்திட்டத்தை முதன்முதலாகத் தமிழ்நாட்டில் நாங்கள் ஆரம்பிக்கும்போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது. முன்மாதிரி என்று சொல்லக்கூடிய அளவில் ஒன்றுமே இல்லை. ஆனால், அரசு உறுதுணையாக இருந்தது. மருத்துவர்கள் உறுதுணையாக இருந்தனர்.

உறுப்பு தானத்தின் முன்னோடி ஹிதேந்திரன்:
தமிழ்நாட்டில் டாக்டர் தம்பதியின் மகன் ஹிதேந்திரன் என்பவர் விபத்துக்குப் பிறகு 2 நாள் கழித்து மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அவரது இதயத்தை வேறு ஒரு சிறுமிக்குப் பொருத்தினோம். அவர் இன்றும் நலமுடன் உள்ளார். இந்தச் சிகிச்சைகூட 2008 இல் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது. அவர் கொண்டுவந்த திட்டத்தின் பலனை அவர் கண்கூடாகவே பார்த்தார்" என்கிறார் அமலோற்பவநாதன்.
இப்போது புரிகிறதா? அன்றைய முதல்வர் மு.கருணாநிதி போட்ட விதைதான் இன்று இந்திய அளவில் தமிழ்நாட்டை 2வது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 9,655 உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.
கடந்த வருடம் மட்டும் 878 உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகமாகச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அடுத்தபடியாக கருவிழிப் படலம். அதற்கடுத்து கல்லீரல். இந்த விவரங்களின்படி நாட்டிலேயே தமிழ்நாடுதான் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் தலைநகரமாக விளங்குகிறது என்றார் ஒரு அதிகாரி.
தமிழ்நாட்டில் இதுவரை 1,615 கொடையாளிகளிடமிருந்து 9,655 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதில் 2,884 சிறுநீரகங்களும் 2,392 கருவிழிப் படலங்களும் 1,485 கல்லீரல்களும் 965 இதய வால்வுகளும் 753 இதயங்களும் 735 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
இதனால் பல ஆயிரக்கணக்கானவர்கள் புதிய உயிர் பெற்றுள்ளனர். பொதுவாக மூளைச்சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த உறுப்பு தானத்தில் பெறப்படும் உறுப்புகள் முதலில் அரசு மருத்துவமனைகளுக்கே வழங்கப்படுகின்றன. அதன்பின்பு தனியார் மருத்துவமனைகளுக்குத் தரப்படுகின்றன என்பது சிறப்பான செய்தி.

வடிவேலு காமெடி எல்லாம் சினிமாவில்தான்:
மேற்கொண்டு விவரங்களைப் பெறுவதற்காக கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம். அவர், "வேறு மாநிலங்களில் ஒருவர் இறந்துவிட்ட பின்னால் சடங்கு சம்பிரதாயம் அதிகம் பார்க்கிறார்கள்.
ஆகவே இறந்தவர் உடலிலுள்ள உறுப்புக்களை தானம் செய்ய முன்வருவதில்லை. தமிழ்நாடு அப்படியல்ல; இது பெரியார் மண். கூடுமான அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது.
இந்தளவுக்கு நம் மாநிலம் முன்னேறி உள்ளதற்குப் பின்னால் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இருக்கிறார். அதற்குச் செயல்வடிவம் கொடுத்த மருத்துவர் அமலோற்பவநாதனின் குழு இருக்கிறது. அவர்தான் இந்தத் துறைக்கான முன்னோடி.
உறுப்பு தானம் எல்லாம் கடுமையான சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் நடக்க முடியும். நீங்கள் சினிமாவில் பார்ப்பதைப் போல வண்டியில் ஆளைக் கடத்திக் கொண்டுபோய் செய்ய முடியாது. நகைச்சுவைக்காக அப்படி வைத்துக்கொள்ளலாம். நிஜத்தில் அது சாத்தியமில்லை.
ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கும்போது இரண்டு குழுவின் ஒத்துழைப்பும் தேவை.
ஒரு குழு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னால், உரியவரைப் பரிசோதனை செய்ய வேண்டும். தானம் தருபவர் ரத்தமும் உறுப்பைப் பெறுபவரின் ரத்தமும் ஒத்து உள்ளதா? கொடுப்பவர் கிட்னி எடையும் பெறுபவர் கிட்னி எடையும் ஒரே அளவில் உள்ளதா என்பதைச் சோதித்து அதற்கு காவல்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒரு டீன் மற்றும் 4 மருத்துவர்கள் முன்னிலையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையைக் காணொளிப் பதிவு செய்ய வேண்டும். ஒரு சமூக ஆர்வலர் உடன் இருக்கவேண்டும். நீதிபதி இருக்க வேண்டும். உறவினர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். முறையாக வாக்குமூலம் தரவேண்டும். அனைத்தையும் பதிவு செய்து கொள்வார்கள். இந்த நடைமுறை எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.

தமிழ் மக்களின் விழிப்புணர்வு:
உயிருடன் உள்ள ஒருவர் ரத்தத்தை தானம் செய்யலாம். எலும்பைச் செய்யலாம். கல்லீரல், கிட்னி செய்யலாம். இறந்த பிறகு ஒருவர் இதயம், கண், கிட்னி, நுரையீரல் எல்லாம் கொடுக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திரைப்படங்களில் வறுமைக்காக ஒருவர் போய் ரத்த தானம் கொடுப்பார். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவார்.
ஆனால், இன்றைக்கு நிலைமை வேறு. ரத்ததானம் 100% இலவசம். எந்த ரத்த வங்கியிலும் பணம் தருவதில்லை. அதைப்போல உறுப்புத்தானத்தை வைத்து முறைகேடாக சில விஷயங்கள் நடந்தன.
ஆனால், இன்று அதற்குச் சட்டம் இடம் தருவதில்லை. கடுமையான சட்டத்தால் சட்டவிரோத செயல்கள் முடக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு அதிகமாகி உள்ளது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் எங்கள் மருத்துவக் கல்லூரிக்கு 6 உடல்களை மக்கள் தானமாகக் கொடுத்துள்ளனர். இவை எல்லாம் நல்ல முன்னேற்றம்" என்கிறார்.
-
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications