பத்திரப்பதிவு.. பொன்னேரி சார் பதிவாளர் ஆபீசில் கரண்ட் கட்.. செய்தியாளரின் போனை பறித்து? ஏன்
சென்னை: தமிழக அரசு பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறையில் மாற்றியதை தொடர்ந்து பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகிறார்கள்.. ஒரு சிலர் சுப முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள்.. பாடுபட்டு உழைத்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை பதிவு செய்ய நேரிடும்போது, திடீரென சில இடையூறுகளை பொதுமக்கள் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் பொன்னேரியில் நேற்று நடந்துள்ளது.
பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், ஆங்கிலேயர் கால பழமையான கட்டிடத்தில், 1865ம் ஆண்டு முதல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது... இங்குதான் சொத்து பரிமாற்றங்களுக்கான பத்திரப்பதிவு, நகல் பத்திரம், அடமானம் பத்திரப்பதிவு, பாகப்பிரிவினை, வில்லங்கச்சான்று, பிறப்பு - இறப்பு சான்று உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் நடக்கின்றன.

சொத்துக்கள் பதிவு
ஆனால், சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படும் கட்டடம் சேதமடைந்ததால், ஆவணங்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.. எனவே, புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதுவரை, பொன்னேரி - தச்சூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம், பெருமாள் நகர் பகுதிக்கு, தற்காலிகமாக சார் - பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
அதுமட்டுமல்ல, புதிய அலுவலகம் கட்டுவதற்காக, 2.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், தரை மற்றும் முதல்தளம் என, 4,562 சதுர அடி பரப்பில் இக்கட்டிடம் தயாராகிறது.. இதற்கான கட்டுமான பணிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது..
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகம்
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தை பொறுத்தவரை நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கமாகும்.. அந்தவகையில் நேற்றைய தினமும் 100க்கும் மேற்பட்டோர் டோக்கன்களை பெற்று பத்திரப்பதிவிற்காக காத்திருந்தனர்.
ஆனால் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது.. மதிய நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீட்டிற்கும் செல்ல முடியாமல், எப்போது கரண்ட் வரும் என்றும் தெரியாமல், பல மணி நேரமாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனர்.
நின்று போன பத்திரப்பதிவு
நீண்ட நேரமாக காத்திருந்தும்கூட, கரண்ட் வரவில்லை.. இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...
பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிலங்களை தினந்தோறும் பத்திரப்பதிவு செய்யும் இவ்வளவு பெரிய அலுவலகத்தில் மின்சாரம் தடைப்பட்ட போதிலும் அதற்கு மாற்று ஏற்பாடு ஏன் செய்யவில்லை? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களுடன் பொதுமக்கள் இந்த வாக்குவாதத்தை நடத்தியபோது, இந்த நிகழ்வுகளை செய்தியாளர் ஒருவர், வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்..
இபி ஆபீஸில் போய் கேளுங்க
உடனே அந்த செய்தியாளரை நோக்கி வந்த சார் பதிவாளர், செல்போனை பிடுங்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது...
பிறகு அங்கிருந்த பொதுமக்களிடம், இங்கு ஏன் கேட்கறீங்க? இபி ஆபீசுக்கு போய் கேளுங்க என்று அலட்சியமாக பதிலளித்தார்.. இதனால் மேலும் கொதிப்படைந்த மக்கள், சார் பதிவாளரை சூழ்ந்து சரமாரியாக கேள்வி எழுப்ப துவங்கினார்கள்.. இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகும்கூட கரண்ட் வராததால், பத்திரப்பதிவிற்காக டோக்கன் பெற்றவர்கள் வாசலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications