ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.. ரூ.6000 நிவாரண தொகை.. இதை கவனிச்சீங்களா? அசர வைக்கும் சம்பவம்!
சென்னை: கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் நிவாரணத்தொகை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருவது தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிலம்பரசன், இ.கா.ப., அவர்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

என்ன சொன்னார்?: பின்னர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதாலும், பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் சூழந்த பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதால் வெள்ளநீர் வடிந்து இயல்புநிலை திரும்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 4 வட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000/- நிவாரணத் தொகை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பிற வட்டங்களில் உள்ள மக்களுக்கு அதற்கேற்ப நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விடுமுறை நாளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாளை ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால், நாளை மறுதினம் தொடர்ந்து நிவாரணத்தொகை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரங்களில் குடும்ப அட்டைதாரர்கள் தமிழ்நாடு அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து முறையாக நியாயவிலைக்கடைக்கு வந்து நிவாரணத்தொகை பெற்று செல்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 206337 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000/- நிவாரணத்தொகையும், 94408 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- நிவாரணத்தொகையும் என மொத்தம் 300745 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரணத்தொகை வழங்குவதற்கு ரூ.220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாலை வரை ரூ.150 கோடிக்கான நிவாரணத்தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றும் மற்றும் நாளை மறுதினம் நிவாரணத்தொகை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, மக்களை பாதுகாக்கும் அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவி, புதுக்குடி, கூனியூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் சென்று நிவாரணத்தொகை பெற வந்த மக்களுக்கு ரூ.6000/-நிவாரண நிதியும் 5 கிலோ அரிசியினை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரணத்தொகை இன்று நண்பகல் வரை 3,69,067 (73 சதவீதம்) குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 164.71 கோடிக்கான நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications