அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும்.. பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவு
சென்னை: மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பிற ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக தளர்வுகற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகளும் பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்குக் குறைவான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

+1 மாணவர் சேர்க்கை
கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்புத் தேர்வு முடிவின் அடிப்படையில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் +1 மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.

அனைத்து வகுப்புகளும் மாணவர் சேர்க்கை
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்களின் தேர்ச்சி விபரங்களைக் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS)இணையதளத்தில் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்
மேலும், உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளதாலும், மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டியுள்ளதாலும், கல்வி தொலைக்காட்சி குறித்த நிகழ்வுகள் குறித்துப் பார்வையிட வேண்டியுள்ளதாலும் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் அரசின் வழி காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14/06/2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 24ஆவது நாளாக நேற்றும் கொரோனா பாதிப்பு குறைந்தது. நேற்று மாநிலத்தில் 12,772 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரே நாளில் 254 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கோவையில் 1728 பேருக்கும் ஈரோட்டில் 1295 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.












Click it and Unblock the Notifications