முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பிறந்த நாள்.. நேரில் வந்து வாழ்த்திய சீனியர் அமைச்சர்கள்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் பிறந்த நாளை முன்னிட்டு சீனியர் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, நேரு, சக்கரபாணி, பொன்முடி உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் சபரீசனுக்கு திமுகவினர் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வெளிப்படையாக நேரடி அரசியலில் செயல்படாதவர். இருப்பினும், ராஜ்யசபா எம்பி தேர்தல் வரும் போதெல்லாம் சபரீசன் எம்பியாக்கப்படுவார் என்கிற பேச்சுகளும் எழும். டெல்லியில் திமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்ட போது, இந்த அலுவலகமே சபரீசனுக்காகத்தான் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

தமிழ்நாடு வந்திருந்த தொழிலதிபர் அதானி, சபரீசனை சந்தித்து பேசினார்; அதிகாரத்தில் இல்லாத சபரீசன் சூப்பர் முதல்வராக செயல்படுகிறாரா? என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இத்தகைய யூகங்கள், விமர்சனங்களுக்கு சபரீசன் தரப்பு எப்போதும் அமைதியாகவே கடந்து சென்றுள்ளது.
இந்த நிலையில் சபரீசனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று களைகட்டின. தமிழக சீனியர் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, அர.சக்கரபாணி, பொன்முடி உள்ளிட்டோர் சபரீசனை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர். எம்.எல்.ஏ. சிவிஎம்பி எழிலரசன், துணை மேயர் சைதை மகேஷ்குமார் உள்ளிட்டோரும் சபரீசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை திமுக நிர்வாகிகள் சபரீசனுக்கு 15 கிலோ சாக்லெட் மாலை அணிவித்து வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications