சென்னை கோயம்பேட்டில் தென்மாவட்ட மக்கள் இரவில் போராட்டம்! அரசு பஸ்கள் சிறைபிடிப்பு! ஒரே பரபரப்பு
சென்னை: சென்னையில் முக்கிய பேருந்து நிலையமாக உள்ள கோயம்பேட்டில் நேற்று இரவில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் முக்கிய பேருந்து நிலையமாக கோயம்பேடு உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும்.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று இரவும் வழக்கம்போல் சென்னை கோயம்பேடு பேருந்த நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் கூடினர். பல இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடக்கும் நிலையில் அவர்கள் தங்களின் குடும்பத்துடன் சொந்த ஊர் புறப்பட்டனர்.
ஆனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததால் அனைத்து பேருந்துகளும் உடனடியாக நிரம்பின.
இதனால் பெண்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால் கோபமடைந்த பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து திடீரென போராட்டத்தில் குதித்தனர். தென்மாவட்டங்களுக்கு முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனக்கூறி கோஷமிட்டனர். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்த புறப்பட்ட பஸ்களை சிறைபிடித்தனர்.
இந்த சம்பவம் கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். முறையாக பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இருப்பினும் கூட தென்மாவட்டங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் கோடை விடுமுறை முடியும் வரை அனைத்து மாவட்டங்களுக்கும் இரவு நேரத்தில் தேவையான அளவு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications