வெற்றி.. கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் மியூசியம்.. கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி!
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் மியூசியம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடியில் பேனா நினைவிடம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இது ஒருபுறம் இருக்க சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் ரூ.80 லட்சத்தில் பிரமாண்டமாக அருங்காட்சியகம்(மியூசியம்) அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7 ம் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து கருணாநிதியின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு
அந்த வகையில் சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் சமீபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இது ஒருபுறம் இருக்க கடலில் பேனா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலும் மீனவர்கள் மனு செய்துள்ளனர்.

கருணாநிதி நினைவிட பணி
இதேபோல் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைப் பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது.

ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம்
மேலும் கருணாநிதி நினைவிடத்திற்குள் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் என்பது பாதியளவு தரைக்குள்ளும், மீதி தரைக்குள் மேலும் அமைய உள்ளது. இந்த இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IIன் கீழ் வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.

அனுமதி
இந்நிலையில் தான் கருணாநிதி நினைவிடத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதலில் அண்ணா நினைவிட வளாகத்தை சுற்றிய பகுதியில் 40 சென்ட் நிலத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 160 சென்ட் நிலத்தில் நிரந்தரமாக அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை அரசு வகுத்தது. இதனால் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் தான் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications