மாதந்தோறும் 1ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை.. சுதந்திர தினத்தன்று வெளியாகும் அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாட்டில் மாதந்தோறும் 1ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் மாதத்தின் முதல் நாளில் சம்பளம் பெறுவதால், அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் சம்பளத்தை செலவு செய்யாமல் வீட்டிற்குத் தேவையான செலவுகளை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரிக்கையை பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது மதுவிலக்கு வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. ஆனால் அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால், அந்த வாக்குறுதி கைவிடப்பட்டன.

ஆனாலும் டாஸ்மாக் மதுக் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழக அரசு கூறி இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 4,787 டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டில் டாஸ்மாக் மதுபான படைகளுக்கு மொத்தமாக 8 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் 1ஆம் தேதி சம்பளம் பெற்று வருகின்றனர்.
அவர்கள் சம்பளத்தை முழுமையாக வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் இந்த முறை ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைப் பின்பற்றி தமிழ்நாட்டில் அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த முடிவு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனால் இந்த அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications