ஒன்றல்ல.. இரண்டு.. இரட்டிப்பு மகிழ்ச்சி.. தமிழ்நாட்டிற்கு வருது 2 புது வந்தே பாரத்.. எங்கே தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டிற்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த சேவைகள் வரும் நாட்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று இது தொடர்பாக தென்னக ரயில்வே கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விஜயவாடா மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய சேவை பெரும்பாலும் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்படும். அடுத்த மாதம் முதல் பயணிகளுக்கு சேவை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். சென்னை டூ திருப்பதிக்கு ரயில் வரப்போவதாக செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் இதன் வேகம் மிக மெதுவாக இருக்க போவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் 6.5 மணி நேரத்தில் பயண காலத்தை முடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே விஜயவாடா - சென்னை இடையே இயங்கும் ரயில்கள் எல்லாம் வெறும் 5.30 மணி நேரத்தில் பயண காலத்தை நிறைவு செய்கின்றன.
இப்போது என்று இல்லை கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த ரயில்கள் 5.30 மணி நேரத்தில் பயணத்தை நிறைவு செய்கின்றன. அப்படி இருக்கும் நிலையில் இப்போது வந்தே பாரத் ரயில் இதே தூரத்தை கடப்பதற்கு 1 மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இரண்டாவது ரயில்: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த மாதம் தொடங்க வேண்டிய ரயில் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
அக்டோபர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும்.
குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் அக்டோபருக்கு பதிலாக செப்டம்பர் மாதமே ரயில் சேவை தொடங்கும் என்கிறார்கள். சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள். முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு சேவைகள் தொடர்பாக நேற்று இது நடந்த தென்னக ரயில்வே கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. அதில் சேவையை தொடங்குவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு விட்டதால் விரைவில் இரண்டு சேவையும் தொடங்கப்படும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications