தமிழ்நாடு Vs கர்நாடகா..! யாருக்கு முதலிடம்? உச்சகட்டத்தில்1 டிரில்லியன் டாலர் யுத்தம்
சென்னை: இந்திய அளவில் கர்நாடகாவும் தமிழ்நாடும் போட்டிப் போட்டு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டு வருகின்றன என்பது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை வைத்து ஒரு கணிப்புக்கு வர முடிந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகக் காவேரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் பெரிய பிரச்சினை இருந்து வருகிறது. அதேபோல சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் இடையே கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது பற்றியும் ஒரு போட்டி ஒவ்வொரு முறையும் நிலவி வருகிறது. இந்த இரண்டு யுத்தங்களுக்கு இடையே இப்போது மூன்றாவது யுத்தம் ஒன்று மவுனமாக நடைபெற்று வருகிறது. அதுதான் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம். வரும் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்.

இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு 8.08% பங்களிப்பைச் செய்து வருகிறது. அதேபோல கர்நாடகா 8.02% பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள போட்டியில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இந்த இரண்டு மாநிலங்களின் மொத்த பரப்பளவு இந்தியா அளவில் 6% கூடம் இல்லை. இரண்டும் மிகச்சிறிய மாநிலங்கள்தான். உபி, பீகார் போன்ற பெரிய மாநிலங்களின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இரண்டு சின்ன மாநிலங்கள்.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது. அதாவது குஜராத் 35071 மொகாவாட் உற்பத்தி செய்து முதல் இடத்தில் உள்ளது. அடுத்த ஆந்திரா உள்ளது. தமிழ்நாடு 14152 மெகாவாட் மின் உற்பத்தி செய்து 3 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், கர்நாடகா தமிழ்நாட்டைப் போல சமவெளி பிரதேசம் அல்ல. மலைப் பிரதேசம். அங்கே சோலார் மூலம்தான் அதிக மின் உற்பத்தி நடக்கிறது. இதில் இந்திய அளவில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்தில் 32.84% என்ற அளவில் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. கர்நாடகா சாஃப்ட்வேர் துறை மற்றும் ஐடி துறை மூலம் இந்தியாவுடன் 42.00% பகிர்ந்து ஏற்றுமதியைக் கொள்கிறேன்.
இந்நிலையில்தான் இந்த இரண்டு மாநிலங்களும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான கனவை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளன. இதை இரு மாநிலங்களும் எட்டிப் பிடிக்குமா? சாத்தியமாகுமா? அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்திய அளவில் இம்மாநிலங்கள் இரண்டும் எந்தளவுக்கு உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்கின்றன என்பதை அறியவேண்டும்.
சமீபத்திய தரவுகளில் அடிப்படையில் தமிழ்நாடு 2024-25 ஆம் நிதியாண்டில் ஜிடிபியின் அளவு 378 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடைந்து இந்தியாவில் இரண்டாவது மாநிலமாக உருவாக உள்ளது. ஆனால், கர்நாடகாவின் 2024-25 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையின்படி ஜிடிபி ஆனது 336.81 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்து இந்தியாவில் 3ஆவது பெரிய மாநிலமாக வர உள்ளது.

இதனடிப்படையில் வைத்துக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கர்நாடகாவை விட முந்தி நிற்கிறது. ஜூலை மாதம் 24 ஆம் தேதி வரையான பிஐபு டெல்லி தரவுகளின் அடிப்படையில் தனி நபர் வருமானம் என்பதில் 2022-23இல் நிதியாண்டில் தமிழ்நாடு 2 லட்சத்து 73 ஆயிரத்து 288 ரூபாய் என்ற விகிதத்தைப் பெற்று 2வது இடத்தில் உள்ளது. ஆனால், கர்நாடக இதே நிதியாண்டில் 3,01,673 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து முன்னே உள்ளது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள தனி நபர் வருமானத்தைவிடக் கர்நாடக தனி நபர் வருமானம் 10% உயர்ந்துள்ளது.
ஆனால் ஆங்கில பத்திரிகையான இந்து வெளியிட்டிருந்த தரவுகளின் படி தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்கள் ஜிடிபி வளர்ச்சியில் 10 மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் கர்நாடகா 6.6 என்ற புள்ளி கணக்கில் 8வது இடத்தில்தான் உள்ளது. தமிழ்நாடு 8.2 என்ற அளவி 2வது இடத்திலும் 9.2 என்ற அளவில் தெலங்கானா முதல் இடத்திலும் உள்ளன.
இதைப் பற்றி ஒருமுறை ஸ்டாலின் அவரது எக்ஸ் பதிவில் கூட சுட்டிக் காட்டி இருந்தார். ஏன் இந்த வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவில் 52% மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளனர். இந்திய அளவில் 15% பங்களிப்பு. ராஜஸ்தானை அடுத்து அதிகமாகக் கர்நாடகாவில்தான் வேளாண்மை செய்யப்படாத நிலங்கள் அதிகம் உள்ளது. 28% அளவுக்குத்தான் வேளாண்மை நடைபெறுகிறது.
காப்பி, மல்பெரி, அரிசு, கரும்பு உற்பத்தியில் கர்நாடகா இந்திய அளவில் பெரிய பங்களிப்பைச் செய்கிறது. அதேபோல மைசூர் சில்க்ஸ் உற்பத்தி சந்தை மிகப்பெரிய அளவில் உள்ளது. அதாவது 35 பில்லியன் டாலர் சில்க்ஸ் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய சில்க் போர்டு அலுவலகமே கர்நாடகாவில்தான் இருக்கிறது.
தமிழகத்தில் 54% மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளனர். இந்திய அளவில் 13% பங்களிப்பு. நம் மாநிலத்தில் வாழை, நெல், தேங்காய், மிளகு, கரும்பு, இஞ்சி எனப் பல பொருட்கள் உற்பத்தியாகின்றன. ஆனாலும் இந்த இரண்டு மாநிலங்களின் பொருளாதாரம் என்பது வேளாண்மை சார்ந்தது அல்ல. தொழிற்சாலை உற்பத்தி மூலம் தான் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. இதன் பங்களிப்பு 33%. அதிகப்படியான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்திய அளவில் 15.8% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. டயர் உற்பத்தி, ஆட்டோ மொபைல் உற்பத்தி, அதன் உதிரி பாகங்கள் உற்பத்தி என அனைத்து சிறப்பாக நடக்கின்றன.
இதை எல்லாம் மனதில் கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின் உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். பல நாடுகள் சென்று முதலீட்டை ஈர்த்து வருகிறார். அவரது அமெரிக்கப் பயணம் இதனை ஒட்டியே அமைந்தது. வேளாண்மை மூலம், இயற்கை வளத்தின் மூலம் தமிழக பொருளாதாரத்தை உயர்த்த முடியாது. அதேபோல ஏஐ தொழில்நுப்டம், ஐடி செக்டார் ஆகியவற்றில் தமிழ்நாட்டை விடக் கர்நாடகா முன்னுக்கு நிற்கிறது. ஆக, அதை ஒட்டிய கவனத்தையும் கூடவே தொழிற்சாலைகளை அதிகரிக்கக்கூடிய காரியத்தையும் முதல்வர் கையில் எடுத்துள்ளார்.
2022-23 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையின் படி கடன்களின் விவரம் கர்நாடக ஐடிஎஸ் ஜிடிபியில் 27.49% ஆக உள்ளது. தமிழ்நாடு 26.29% ஆக உள்ளது. டிடிபிஐ தரவுகளின் படி கர்நாடகாவின் கடன் சுமை கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஐசிஆர்ஏ தகவலின் படி தொடர்ந்து 4 ஆண்டுகளாகத் தமிழகம் கடன் சுமையிலிருந்து முன்னேறி வருகிறது. ஆகவே 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்த இரண்டு மாநிலங்களும் கடன் சுமை பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
ஆனால், மத்திய அரசின் பங்களிப்பு என்பது இந்த 2 மாநிலங்களுக்கும் முறையாகக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், கர்நாடகாவைக் காங்கிரசும் தமிழ்நாட்டை திமுகவும் ஆண்டு வருகிறது. மத்தியில் உள்ள பாஜகவுடன் இந்த இரண்டு கட்சிகளும் மோதல் போக்கையே தொடர்கின்றன. அதனால் சில இழப்புகளும் உள்ளன. அதை மீறி இந்த இரண்டு மாநிலங்களும் சுய பலத்துடன் மாநிலத்தை இந்தளவுக்கு முன்னேற்றி இருப்பது மிகப்பெரிய விசயம்.












Click it and Unblock the Notifications