'பாஜக சதி' வக்பு சட்ட திருத்தம்-நாடாளுமன்றத்தில் தோற்கடியுங்கள்.. தமிழக வக்பு தலைவர் அப்துல் ரஹ்மான்
சென்னை: வக்பு சட்டவிதிகளை பலவீனப்படுத்தி தங்களுக்கு சாதகமாக வளைத்துப்போட முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். வக்பு சொத்துகளை முறையாகப் பேணிப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இருப்பதும், அந்தச் சட்டங்களைத் திருத்தி பலவீனப்படுத்தாமல் பாதுகாப்பதும் அரசின் கடமை என்றும் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: முஸ்லிம் சமுதாயத்தின் பெரியவர்கள், தனவந்தர்களால் இறையருளை நாடி, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, அவரவர் பகுதிகளில் உள்ள மஸ்ஜித்கள், தர்காக்கள், மத்ரஸாக்களின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவைதான் வக்பு சொத்துகள். இவற்றைக் கண்காணிக்கக் கூடிய பொறுப்பை அரசு மேற்கொள்வதுதான் சரி என்று தீர்மானிக்கப்பட்டு, 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அதற்கென சட்டம் இயற்றப்பட்டு, பிறகு 1958ஆம் ஆண்டு வக்பு வாரியங்கள் எல்லா மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டன.

இந்த வக்பு வாரியத்தின் பொறுப்புகளும், கடமைகளும் இரண்டு வகைகளில் அமையும். ஒன்று,
1) பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், தர்காக்களை நிர்வகிக்கும் நிர்வாக முறைகளைக் கண்காணித்தல்
2) மற்றொன்று, அவற்றின் பெயரால் உள்ள வக்பு சொத்துகளைக் கண்காணித்தல்.
இந்தப் பொறுப்புகளையும், கடமைகளையும்தான் வக்பு வாரியம் எல்லா மாநிலங்களிலும் செய்து வருகிறது. 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், பிறகு 1995 ஆம் ஆண்டு விரிவாக்கி முழுமைப்படுத்தப்பட்டு, அந்த சட்ட விதிகளின் அடிப்படையில் அவை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் படுகின்றன. அந்தச் சட்டத்தின் பெயர் வக்பு ஆக்ட் 1995.
2013-ம் ஆண்டு திருத்தம்: இதிலுள்ள சில குறைபாடுகளை, பலவீனமான கருத்துகளை நீக்கி, சரியான மாற்றங்களை உருவாக்குவதற்காக 2013ஆம் ஆண்டு வக்பு சட்டம் 1995 இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. பிறகு, அந்த சட்ட விதிகள்தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. இந்த சட்ட விதிகளின் மூலமாகத்தான் சொத்துகள் பாதுகாக்கப்பட்டும் நிர்வகிக்கப்பட்டும் வருகின்றன.
வக்பு சொத்துகள் நிலைமை: வக்பு சொத்துகள் சிலவற்றை போலி ஆவணங்களைக் கொண்டு ஏமாற்றி சொந்தப்படுத்திக் கொண்டதாகவும், சிலவற்றை ஆக்கிரமித்ததாகவும், எஞ்சிய சொத்துகள் முறையான பயன்பாட்டில் இருப்பதாகவும் - அந்தந்த மாநிலங்களின் அளவுக்கு ஏற்ப வக்ப் சொத்துகளின் நிலை இருந்து வருகிறது.
தமிழகத்தில் வக்பு வாரியம்: தமிழ்நாட்டைப் பொருத்த வரை, ஏறத்தாழ 70 ஆயிரம் வக்பு சொத்துகள் உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப இவற்றின் மதிப்பீடு மாறுபடும். அதை ரூபாய் கணக்கில் மதிப்பிட்டுச் சொல்ல முடியாது. மஸ்ஜித்கள், தர்காக்கள், மத்ரஸாக்கள், கப்ருஸ்தான்கள் என தமிழ்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வக்ப் நிறுவனங்கள் உள்ளன. இவற்றை தமிழ்நாடு வக்ப் வாரியம் முறையாகக் கண்காணித்து வருகிறது. இவற்றுள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துகளை மீட்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசின் துணையோடு தமிழ்நாடு வக்பு வாரியம் மும்முரமாக செய்து வருகிறது.
40 திருத்தங்கள் மேற்கொள்ளும் பாஜக அரசு: இந்த வக்பு சட்டம் 1995 இல், சொத்துகள் தொடர்பிலான விதிகளை ஏறத்தாழ 40 திருத்தங்களைக் கொண்டு செயல்முறைப்படுத்தலாம் எனும் தகவல் இன்றைய செய்தி ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக வக்ப் சட்ட திருத்த ஆவணம் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறையான விவாதத்திற்குப் பிறகு அது சட்டமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்குதான் திருத்தம் தேவை: இந்த சொத்துகளை முறையாகக் கண்காணிக்க கூடிய அல்லது பாதுகாக்கக் கூடிய வகையிலான சட்ட விதிகளில் வேண்டுமானால் இன்னும் அதிகமான திருத்தங்கள் செய்வதற்கு கவனம் செலுத்தலாம். ஆனால், இப்பொழுது இருக்கக்கூடிய சட்ட விதிகளை பலவீனப்படுத்தி, எப்படி வேண்டுமானாலும் வக்பு சட்டங்களை வளைத்து, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி திருத்தங்கள் செய்ய முயன்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த சொத்துகளெல்லாம் முஸ்லிம் தனவந்தர்களால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக என்று மட்டும் தானமாகத் தரப்பட்டவை. அப்படிப்பட்ட இந்த சொத்துகளை பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்பதே நமது கருத்து.
வருத்தத்துக்குரியது: எனவே, வக்பு சட்டம் 1995இல் 40 திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும், அதுவும் வக்பு சொத்துகளை பாதுகாப்பது, பராமரிப்பது தொடர்பில்தான் அந்தத் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி, சட்டத்தின் துணையோடு வக்பு சொத்துகளை வளைத்துக் கொள்வதற்கு யார் முனைந்தாலும் அந்த சட்டத் திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் அதைத்தான்
வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் தோற்கடியுங்கள்: எனவே, வக்பு சொத்துகளை முறையாகப் பேணிப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இருப்பதும், அந்தச் சட்டங்களைத் திருத்தி பலவீனப்படுத்தாமல் பாதுகாப்பதும் அரசின் கடமையாக இருக்கிறது. இதற்கு மாற்றமாக, வக்பு சட்டங்களை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சித்தால் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அந்த முயற்சியைத் தோற்கடிக்கக்கூடிய வகையிலான வேலைகளை - நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படாமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications